ஈரான் போர்: மத்திய கிழக்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார்


மத்திய கிழக்கில் நமது மாபெரும் இராணுவ முயற்சிகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது குறித்து தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் நாம் மேற்கொண்டு வரும் மாபெரும் இராணுவ முயற்சிகளைக் குறைத்துக்கொள்வது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், நமது நோக்கங்களை அடைவதற்கு நாம் மிகவும் நெருங்கிவிட்டோம் என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறினார்.

இஸ்லாமியக் குடியரசுடன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வெளியாகின.

நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நான் நினைக்கிறேன் என வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப்  இதனைக் கூறினார். 

நான் போர் நிறுத்தம் செய்ய விரும்பவில்லை. எதிர்தரப்பை முற்றிலுமாக அழித்துக்கொண்டிருக்கும்போது, ​​நீங்கள் போர் நிறுத்தம் செய்யக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியும்தானே என்றும் அவர் மேலும் கூறினார்.

ட்ரூத் சோஷியல் பதிவில், ட்ரம்ப் அமெரிக்காவின் நோக்கங்களை, ஈரானின் ஏவுகணைத் திறனைக் குறைப்பது, ஈரானின் பாதுகாப்புத் தொழில்துறை தளத்தை அழிப்பது, அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையை ஒழிப்பது, ஈரானை அணுசக்தித் திறனுக்கு அருகில் கூட வரவிடாமல் தடுப்பது மற்றும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு நட்பு நாடுகளைப் பாதுகாப்பது என்பனவாக விவரித்தார். 

குறிப்பாக இஸ்ரேல், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகளை அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கைக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் பட்டியலிட்ட ஐந்து வளைகுடா நாடுகளும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

மூடப்பட்ட ஹோர்முஸ் ஜலசந்திப் பிரச்சினை குறித்தும் அமெரிக்க அதிபர் பேசினார். இது எண்ணெய் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளதுடன், போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக உலகின் எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழிப்பாதை வழியாகவே செல்கிறது.

ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதைப் பாதுகாத்து கண்காணிக்க வேண்டும்  அமெரிக்கா அதனைப் பயன்படுத்துவதில்லை என்று டிரம்ப் கூறினார்.

கேட்டால், இந்த நாடுகளின் ஹோர்முஸ் முயற்சிகளுக்கு நாங்கள் உதவுவோம், ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டவுடன் அது அவசியமாக இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

No comments