கோத்தா பின்னே! யோசித முன்னே!!



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்சவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தான் சிங்கப்பூருக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதால் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி அவர் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக வேறொரு திகதியை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷ விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, இம்மாதம் 17ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு மீள அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புக்கு அருகிலுள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் பல வீடுகளை சட்டவிரோதமான முறையில் சிலருக்கு வழங்குவதற்கான பரிந்துரை கடிதங்களை வழங்கியமை தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோசித ராஜபக்ச, மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை (10) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையினை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் கட்டளையிடடுள்ளது.


No comments