நீதிமன்றின் முன் நீதி கோரி போராட்டம்!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை காவல்துறையின்; துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) ஊர்காவற்றுறை நீதிமன்று மற்றும் இலங்கை காவல் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த 17 வயதுடைய அருள்பாயஸ் என்ற சிறுவனுக்கு நீதி கோரியே மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிரான கோசங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.
தனது மகனை இலங்கை காவல்துறையின் ஊர்காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரியே சுட்டதாக உயிரிழந்த சிறுவனின் தந்தை பகிரங்கமாகக் குற்றஞ்சாடடுக்களை முன்வைத்திருந்தார்.
இத்தகைய மிலேச்சத்தனமான கொலைகள் இனியொருபோதும் இடம்பெறக் கூடாது என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், கொலைக்குக் காரணமான இலங்கை காவல்துறைக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதி கோரியிருந்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அதிகாலை வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் வாகனத்தின் மீது தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். காவல்துறையினர்; மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோதே துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்திருந்த நிலையில், அதில் பயணித்த 17 வயதுடைய மாணவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment