நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையே காரணம்
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தில் தற்போது அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் போர் நிலைமை காரணமாக தற்போது ஈரான் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் குதங்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன,
இதனால் உலகில் எண்ணெய் விலை கடுகதி வேகத்தில் உயர்ந்து செல்கிறது. 68 டொலராக இருந்த எண்ணெய் விலை தற்போது 100 டொலருக்கும் அதிகமாகி உள்ளது. இதனால், சுவிஸ், அமெரிக்கா, கனடா பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்படுகிறது.
இலங்கையை பொறுத்த வரைக்கும், மே மாதம் வரைக்கும் தேவையான எரிபொருளே உள்ளது. எரிவாயும் அப்படித்தான்.
எமது நாட்டை பொறுத்த வரைக்கும் எரிபொருளை களஞ்சியபடுத்த போதிய அளவு களஞ்சிய வசதிகள். இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது,
கடத்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சிய படுத்தி வைக்க கூடிய பெரியளவிலான களஞ்சிய சாலைகளை கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது.
தற்போது மே மாதம் வரைக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவே QR பொறிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.
கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்
தற்போதைய நாட்டின் நிலைமை இந்த அரசாங்கத்தால் ஏற்பட்டதில்லை. உலகளாவிய பிரச்சனை இதனை எமது நாட்டு மக்கள் பூரணமாக விளங்கிக்கொண்டுள்ளனர். இதனை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யலாம் என முனைகின்றார்கள்.அது அவர்களுக்கு தோல்வியே தரும் ஏனெனில் நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக வரிசைகள் ஏற்பட்டால் அதனை ஒழுங்கமைத்து குழப்பங்கள் இன்றி எரிபொருள் விநியோகிக்க அந்த அந்த பகுதி பிரதேச செயலர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டால் ,. வரிசையில் நிற்பவர்களுக்கான குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை வாரத்தில் 4 நாட்களே வேலை நாட்களாகவும் புதன்கிழமைகளில் விடுமுறை விடுவது தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகிறது.
அத்துடன், பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் தொடர்பில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
நாட்டு மக்கள் அநாவசிய போக்குவரத்துக்களை தவிர்த்து , இருக்கும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
எமது நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்காக சீனா , ரஷ்யா , இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். தற்போது இந்தியாவில் இருந்து இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் வரவுள்ளன.
அமெரிக்க - ஈரான் யுத்தம் இனியும் தொடர கூடாது. யுத்தத்தால் இரு நாடுகளும் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளன. இந்த யுத்தம் தொடருமானால் உலக நாடுகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் எனவே இந்த யுத்தம் தொடர கூடாது.
அதேநேரம் எமது நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருளை மக்கள் எந்தவிதமான கலவரங்களும் இன்றி இருப்பதனை அனைவரும் பகிர்ந்து சிக்கனமாக எரிபொருளை பாவிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment