சுரேஷ் சலே கைது : ஒரு இலட்சம் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்குக் கூட்டு எதிரணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மக்கள் மனுப் போராட்டம் மஹரகமவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹரகம நகர சபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இதன்போது உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.
நாட்டைப் பாதுகாத்த புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தக் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என மேலும் தெரிவித்தனர்.

Post a Comment