17,000 மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்
இலங்கைக்கு ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதனை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
இந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வந்தது என்பதை நிர்வாக பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.
தற்போது கொள்முதல் கட்டளை (ஒர்டர்) செய்யப்பட்ட அனைத்து கப்பல்களும் திட்டமிட்டபடி வந்து சேர்வதாகவும், நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஒர்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை புதிய கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ், அனைத்து நோயாளர் காவு வண்டிகளுக்கும் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதன் மூலம், அவசர சிகிச்சை சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நோயாளர் காவு வண்டிகள் இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், களஞ்சியசாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், சில தரப்பினர் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க மோசடி கணக்குகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது என்று எச்சரித்தார்.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான fuelpass.gov.lk ஐ மட்டுமே பயன்படுத்துமாறும், வேறு எந்த வலைத்தளம் அல்லது மூன்றாம் தரப்பினருக்கும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
QR அமைப்பின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்த அவர், வாகனங்கள் அல்லது மொபைல் எண்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பதிவு செய்ய முடியாத நபர்களுக்கான சிக்கல்களைத் தீர்க்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

Post a Comment