மூதூரில் பாவனைக்கு உதவாத 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு!
திருகோணமலை - மூதூர்பிரதேசம் இறால்குழி பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று (05) இடத்தள ஆய்வை மேற்கொண்டனர்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, மனித பாவனைக்கு முற்றிலும் உகந்ததல்லாததும், சுகாதாரத்திற்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் புழுக்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இருந்த, கருவாடு தயாரிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்ட சுமார் 1500 கிலோ கிராம் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு தரமற்ற மீன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மீன்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டன.
மேலும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, கைப்பற்றப்பட்ட மீன்கள் உடனடியாக அழிக்கப்பட்டன.
இதனையடுத்து, மனித பாவனைக்கான உணவுப் பொருட்களை கொள்முதல் செய்யும் போது அவற்றின் தரம், சுகாதார நிலை மற்றும் சேமிப்பு முறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment