சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்


2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால், அவரை பதவி நீக்கம் செய்த விடயத்தை சபாநாயருக்கு எழுத்து மூலம் அறிவித்தது முறையானதா என்ற கேள்வி சட்டவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இலங்கையை கடைசியாகக் கட்டியாண்ட பிரித்தானியர்கள், இந்தத் தீவின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு தந்திரமாக சுதந்திரத்தை வழங்கிச் சென்ற எழுபத்தெட்டாவது ஆண்டு கடந்த நான்காம் திகதி.

இந்த நாள் நெருங்கி வரும்போதெல்லாம் இலங்கை இரு தேசம் என்பதை அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் கொடிகள் காட்டிக் கொண்டிருக்கும். சிங்கள பிரதேசங்களில் வாள் ஏந்திய சிங்கக்கொடி பறக்க தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்படும். இதனால் தமிழரின் தேசியக்கொடி கறுப்பு என்பதாகவே காட்சி கொடுக்கும். 

தாயகக்கவி புதுவை இரத்தினதுரை அன்றொரு நாள் இயற்றிய - நீங்க வேறு நாடைய்யா, நாங்க வேறு நாடு - என்ற பாடலின் அர்த்தம் பெப்ரவரி நாளில் பொழிப்பாக காதுகளில் விழும்போது நன்றாகப் புரியும். அநுர குமர அரசின் இரண்டாவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வு வழக்கம்போல கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. 

சேனநாயக்கக்களிலிருந்து இறுதியாக ரணில் வரை தங்களின் எழுப்பம் காட்டும் படைத்துறையினரின் சாகசங்களையே இந்நாளில் முக்கியத்துவப்படுத்துவது வழக்கம். ஆனால் அநுர குமர அரசு இதனைச் சற்று கீழிறக்கி படைத்துறையினரின் அணிவகுப்புகளோடும் பலவின மாணவர்களின் நிகழ்வுகளோடும் மாற்றிக் கொண்டது சிங்கள இனவாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. 

விடுதலைப் புலிகளுக்கும் வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கும் (தமிழர்கள்) அநுர குமர அரசு அடிபணிந்து படைத்துறையினரின் வீரதீரங்களை காட்டவில்லையென முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர கூச்சல் போடுகிறார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ராஜபக்சக்கள் ஒழித்துக் கட்டிய வீரத்தை அநுர குமர அரசு மூடிமறைத்துவிட்டது என்று நாமல் பேபி ஒப்பாரி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது, காணாமலாக்கப்பட்டது, சிறையிலடைக்கப்பட்டது எவ்வகையானது என்பதை அநுர குமரவின் ஜே.வி.பி.யினரும் அனுபவத்தில் கண்டவர்கள் என்பதை நாமல் பேபி அறிந்திருக்கவில்லை போலும். 

எங்கு அடிபட்டாலும் நாய் காலைத் தூக்கிக் கொண்டு ஊளையிடுவதுபோல இந்த இனவாதிகளின் வாழ்க்கை இப்படித்தான் கக்கிக் கொண்டிருக்கும். ஒருவகையில் பார்க்கின் இவர்களுக்கு இன்னமும் புலிப்பயம் இருப்பதுபோல தெரிகிறது. ஆண்டாண்டுதோறும் இவர்கள் இனவாதத்தையே தங்களுக்கான ஆயுதமாக காவித்திரியப் போவது தெரிகிறது. 

இது ஒருபுறமிருக்க தற்போது நாற்றமெடுத்து வரும் தமிழர் தாயக அரசியலை கவனிக்க வேண்டியது அவசியமானது. முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்ததால் வடமாகாண சபை தமிழரசின் உட்கட்சி மோதலில் முடக்கம் கண்டதுபோல, கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இன்னொருவரான சுமந்திரனால் தமிழரசுக் கட்சி சரிவு நிலையில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை எதிரணியினர் மட்டுமன்றி வீடுக்குள் வசிப்பவர்களும் காண்கின்றனர். சிவஞானம் சிறீதரனை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் இதற்கான சான்றாக அமைந்துள்ளன. தமது எம்.பி. பதவியை பறிப்பதை இலக்காகக்கொண்டு காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை சிவஞானம் சிறீதரனே அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். 

தனது சகாவான சாணக்கியனை தமிழரசின் முக்கிய புள்ளியாக உயர்த்தும் முனைப்பில் சுமந்திரன் தீவிரமாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சாடிக்கு ஏற்றதாக ஒரு மூடி அரசியலிலும் தேவைப்படுகிறது போலும். கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவராக சாணக்கியனை நியமித்திருப்பதாக சுமந்திரன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 

தமிழரசுக் கட்சிக்குள்ளிருக்கும் பல குழுக்களில் எந்தக் குழுவுக்கு இந்த நியமன அதிகாரம் உள்ளது என்று கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. மட்டக்களப்பில் சிறீநேசன் எம்.பி. பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்து இதனை நிரூபிக்கிறது. சிறீதரனை இப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கால அவகாசம் வழங்குவதென்றும், அதன் பின்னர் சாணக்கியனை தற்காலிகமாக இப்பதவிக்கு நியமிக்கலாமெனவும் சிலர் கண்ட கனவு நடைமுறைக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். 

சாணக்கியனை கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நியமித்திருப்பதாக சுமந்திரனே அறிவித்திருந்தார். அடுத்த சில மணித்தியாலங்களில் சுமந்திரனின் வடமராட்சித் தொகுதியில் தமி;ழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் பெதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடனடியாக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒர் அறிக்கையை கட்சியின் பல மட்டங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பியிருந்தார். 

'இது ஆர்வக்கோளாறு என்றாலும் கட்சியின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் குந்தகமானது. இவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். கட்சியின் தலைமை நிலைக்கு இது முரணானதும்கூட" என்று திரு.சி.வி.கே.சிவஞானத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையின் இறுதிப் பகுதியில், தலைமை நிலைக்கு இது முரணானதும்கூட என்று குறிப்பிடப்பட்ட வரிகள் ஆழமான அர்த்தம் கொண்டவை. சாணக்கியன் கட்சியின் தலைமையால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றக் குழுத்தலைவராக நியமிக்கப்படவில்லையோ என்ற சந்கேதத்தையும் இது ஏற்படுத்துகின்றது. 

சிறீதரன் எம்.பி. தலைவர் பதவியிலிருந்து தாமாகவே வெளியேறினால் சாணக்கியனை தற்காலிகமாக அப்பதவிக்கு நியமிக்கலாமென கட்சி தற்காலிகமாக முடிவெடுத்ததாகவம் ஒரு தகவல் உண்டு. ஆனால், அது மறைக்கப்பட்டு, சாணக்கியனை அப்பதவிக்கு நியமித்து விட்டதாக சுமந்திரன் அறிவித்ததால்தான் இவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு கொழுத்தியும் மகிழ்ச்சி தெரிவிக்கும் நிலைமை உருவாகியது. 

சுமந்திரன் தன்னிச்சையாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்துகள் கட்சித் தலைமைக்குள்ளேயே அபிப்பிராய பேதங்களை உருவாக்கி வருகிறது. கட்சியின் மூத்த உறுப்பினர் ;ஒருவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் பாம்புக்கு பால் வார்க்க வேண்டாமென்று நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு விடயம் விசம்போல பரவி வருகிறது. மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன எம்.பி.யான தயாசிறி ஜெயசேகர நாடாளுமன்றத்தில் சிறீதரன் மீது வசைபாடிய வரலாறு பிரசித்தமானது. இதற்குத் தேவையான விடயதானங்களை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே வழங்கியிருந்தாரென கடந்த வாரம் இப்பத்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றொரு அரசியல் விமர்சகர் தாம் எழுதும் வாரப்பத்தியில் அந்த எம்.பி.யின் பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். 

குறிப்பிட்ட தமிழரசு எம்.பி. முன்னர் ராஜபக்சக்களின் அரசியல் அணியில் ஒருவராகச் செயற்பட்டவர் என்றும், இப்போது அதே ராஜபக்ச அணியைச் சேர்ந்த தயாசிறி ஜெயசேகரவுடன் இவர் வைத்திருக்கும் தொடர்பின் வெளிப்பாடாகவே சிறீதரன் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிகிறது. எனவே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் அந்த எம்.பி.மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் கிழக்கு மாகாணத்திலிருந்தே வந்துள்ளது. 

இறுதியாக இன்னொரு முக்கிய விடயம். ஜனவரி மாதம் 30ம் திகதியிட்ட கடிதம் ஒன்றை நாடாளுமன்ற சபாநாயகருக்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பதில் செயலாளர் சுமந்திரனும் ஒப்பமிட்டு அனுப்பியிருந்தனர். கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரனை நீக்க தங்கள் கட்சி முடிவெடுத்துள்ளதாக இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டதே தவிர பதவி நீக்கப்பட்டதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. 

2024 நவம்பர் பொதுத்தேர்தலையடுத்து தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி தங்களின் தலைவராக சிவஞானம் சிறீதரனை தெரிவு செய்தனர். அவ்வேளையில் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் சிவஞானம் சிறீதரனின் நியமனம் தொடர்பாக சபாநாயகருக்கு எந்தக் கடிதமும் அனுப்பவில்லை. சிறீதரனின் பதவி நியமனம் நாடாளுமன்ற குழுவுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அது தொடர்பாகக் கடிதம் எழுதும் தேவை கட்சியின் தலைமைப்பீடத்துக்கு இருக்கவில்லை அல்லது பொருந்தாதது என்பதே இதன் கருத்து. 

அப்படியானால் சிறீதரனின் பதவி நீக்க முடிவை நாடாளுமன்றக் குழுவே எடுத்திருக்க வேண்டும். இதன்படி பார்க்கின், சிறீதரனை பதவி நீக்கம் செய்த கடிதத்தை சபாநாயகருக்கு தமி;ழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தினர் எழுத்து மூலம் அறிவித்திருப்பது முன்னுக்குப்பின் முரணானது. சட்டச் சிக்கலுக்குள் இது இழுத்துச் சென்றிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சட்டவாளர்கள் சிலர் இதனை பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனைக்கும் அடி சறுக்குமாம்!

No comments