சவப்பெட்டியுடன்உறவுகள் வீதியில்!



அல்லைப்பிட்டியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றிருந்தது.

இதனிடையே இறுதிக்கிரியைகளின் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

முன்னதாக இறுதிக்கிரியைகளின் பின்னராக குழப்பங்களை எதிர்பார்த்து காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.எனினும் அவர்களை தாண்டி கொலையாளிகளான காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொல்லப்பட்ட தமது பிள்ளைக்கு நீதி வேண்டும், காவல்துறையினரின் அராஜகம் தொடர்கிறது" என கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்தவர்கள் ஈடுபட்டனர்.

அதேவேளை அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சம்பவத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வெளியிட்ட புகைப்படங்களும் அவர்கள் கூறும் தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments