உள்ளாட்சிச் சபைகளின் அலங்கோல அரசியல்! பனங்காட்டான்


அந்தந்தப் பிரதேச மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவென நிறுவப்பட்ட உள்ளா
ட்சிச் சபைகள் இன்று அரசியல்

கட்சிகளின் கிளைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் கொப்புப் பாய்ச்சல்களும் கிளை தாவல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன. சில கட்சிகளின் தலைமைகள் கொள்கை துறந்து, சேராத இடம் சேர்ந்து தங்கள் முகத்தில் தாமே கரி பூசுகின்றன.

கடந்த வருடம் மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் நிகழ்கால குழப்பங்கள் பற்றி எழுத முனைந்த வேளையில், முந்தி வந்த காதை பிந்தி வந்த கொம்பு மறைத்த கதைபோல விடயம் திசை திரும்ப நேர்ந்துள்ளது. இத்திருப்பத்தின் காரணமாக இரண்டு விடயங்களை முதலில் பார்த்துவிட்டு பின்னர் இவ்வாரத்தானதுக்கு வரலாம். 

கடந்த இரண்டு வருடங்களாக காங்கேசன்துறையிலுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான செயற்பாடுகள் அது அமைந்துள்ள காணிகளை பறிகொடுத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னுரிமை கொடுத்து அக்காணிகளுக்கு முன்னால் பௌர்ணமி தினங்களில் (பௌத்தர்கள் இதனை போயா தினம் என்பர்) உரிமைப்  போராட்டம் நடத்த ஆரம்பித்தவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர். 

இவ்வாறான ஒரு போராட்டம் நடைபெறுவதை தெரியாததுபோல் பாசாங்கு பண்ணிக் கொண்டு தமிழ் மக்களின் தலைமைக் கட்சி இருந்து வருகிறது. ஆனால், இதன் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மட்டும் இதில் பங்குபற்றி வந்தார். இதற்காக இவர்மீது கட்சி எப்போது நடவடிக்கை எடுக்குமோ தெரியாது. 

அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் ஒரு வாரத்துக்கு முன்னர் தமக்கேயுரித்தான தர்பார் நடத்தினர். இப்போது தாக்கப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நயினாதீவு விகாராதிபதியும், யாழ்ப்பாண நாகவிகாரை விகாராதிபதியும் திடுதிப்பென களத்தில் குதித்துள்ளனர். திஸ்ஸ விகாரை அமைந்திருக்கும் காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளதோடு இதனை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தாங்கள் எடுத்துக் கூறியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

இரண்டு விகாராதிபதிகளும் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வருபவர்கள். இவர்களின் கூற்றுகள் சமூகத்தின் ஒருபகுதியினரால் வரவேற்கப்பட்டதாயினும் வேறு சிலரின் சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளன. தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் வடமாகாணத்துக்கான பிரதான விகாராதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். தாங்கள் இருவரும் பதவி இறக்கம் செய்யப்பட்டது போன்ற தாக்கத்தினாலேயே இவர்கள் காணி விடயங்களில் மக்கள் பக்கம் குரல் கொடுத்திருக்கலாமென ஒரு வாதம் உண்டு. எதுவாயினும் நீதியான தீர்வு இறுதியில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் கைது பரபரப்பாக பேசப்படும் செய்தி. இவரது முப்பதாண்டு கால அரசியல் வாழ்வு எப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இவர் ஒரு முன்னாள் போராளி என்பதும் இதற்குக் காரணம். ஆனால், 2000ம் ஆண்டு சந்திரிகா அரசிலிருந்து இறுதியாக 2004ல் கோதபாய - ரணில் ஆட்சிவரை அமைச்சராக இருந்தவர் இவர். 

போர்க்காலத்தில் இவருக்கு வழங்கப்பட்ட 19 சுடுகலன்கள் இதுவரை அரசிடம் மீளளிக்கப்படவில்லை என்பது தொடர்பாக இவரால் சரியான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை என குற்றவியல் விசாரணை பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழமையாக அரசியல்வாதிகளின் விளக்கமறியல் என்பது சிறைச்சாலையிலுள்ள மருத்துவமனையாகவே அமையும். இறுதியாக, ரணில் விக்கிரமசிங்கவும் விளக்கமறியலை மருத்துவமனையிலேயே கழித்தார். இ;ப்போது டக்ளஸ் தேவானந்தாவும் அப்படித்தான். பார்க்கப்போனால் அரசியல்வாதிகள் எல்லோருமே நோயாளிகள்போலத் தெரிகிறது. 

இது ஒருபுறமிருக்க, பிள்ளையான், டக்ளஸ் பாதையில் அடுத்தது அவரா இவரா என்று வேறு சில தமிழ் அரசியல்காரர்களின் பெயர்களை ஊடகங்கள் எழுத ஆரம்பித்துள்ளன. இந்த விடயத்திலும் என்ன நடைபெறுமென்பதை அறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த வாரத்துக்கு எழுத வந்த விடயம், உள்ளாட்சிச் சபைகளின் இயங்குதளம் அல்லது அவைகளை இயக்கும் பின்னணி பற்றியது. கிராமசபைகள், பட்டினசபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் என்பவை ஒரு காலத்தில் உள்ளாட்சிச் சபைகளாக இருந்தன. இவைகளின் பிரதான பணியாக அந்தந்த பகுதி வீதிகள் பராமரிப்பு, குளங்கள் குட்டைகள்; துப்பரவு, விவசாய அபிவிருத்தி, தெருக்களின் மின்விளக்குகளை பராமரிப்பது, சோலை வரி அறவிடுதல் மற்றும் சைக்கிள்கள் வண்டில்களுக்கு இலக்கத்தகடுகள் வழங்கி நிதி சேகரிப்பது என்பவை. 

முன்னைய காலங்களில் இச்சபைகளின் தேர்தல்களிலும் நிர்வாகத்திலும் பெருமளவில் அரசியல் கட்சிகள் தங்களை அடையாளப்படுத்துவதில்லை. தெற்கில் ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இடதுசாரிகளும், தமி;ழர் பிரதேசங்களில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ்,. முஸ்லிம் கட்சிகளும் இத்தேர்தல்களில் தேவைப்படும்போது தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும். வடக்கிலும் கிழக்கிலும் இச்சபைகளின் நிர்வாகம் எந்தக் கட்சியிடம் இருக்கிறது என்பதை வாகனங்களுக்கு வழங்கப்படும் இலக்கத் தகடுகளின் வர்ணங்கள் காட்டிவிடும். மூவர்ணம் எனில் தமிழரசு, நான்கு வர்ணங்கள் எனில் காங்கிரஸ் என்பது அடையாளம். 

இப்போது நிலைமை அப்படியில்லை. அரசியல் கட்சிகள் தேர்தலின்போதே உட்புகுந்து அபேட்சகர் தெரிவிலும், வாக்கு வேட்டையிலும் தம்மை ஈடுபடுத்தும். நகரசபை, பிரதேச சபை, மாநகர சபை ஆகிய மூன்றுமே இப்போது உள்ளவை. கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற இச்சபைகளுக்கான தேர்தல்களின்போது நிகழ்ந்த  குரங்குப் பாய்ச்சல்களைவிட, சபைகள் உருவான பின்னர் இடம்பெறும் தாவல்கள் வேகமானவை. 

339 சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் 49 அரசியல்கட்சிகளும், 14 சுயேட்சைக் குழுக்களுமாக 75,589 பேர் போட்டியிட்டனர். தெற்கில் 151 சபைகளில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. தமிழர் தாயகத்தில் தமிழரசு கட்சி 377 உறுப்பினர்களைப் பெற்றது. உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் தமிழரசுக் கட்சிக்கே  அதிகம். ஆனால், இதன் வெற்றி சொரியல் காணிகள் போன்றது. எனினும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில இடங்களில் சேராத இடங்களோடும் சேர்ந்து சபைகளை தமிழரசு கைப்பற்றியது. 

இலங்கையின் இரண்டு மாநகர சபைகள் இப்போது கூட்டுச் செயற்பாட்டினால் நெருக்கடியைச் சந்தித்தன. முதலாவது, யாழ்ப்பாணம்  மாநகர சபை. டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்துக்குத் தேடிச் சென்ற தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஈ.பி.டி.பி.யின் ஆதரவோடு தமிழரசு கட்சியை ஆட்சியில் ஏற்றி அதன் மேயரையும் கதிரையில் அமர்த்தினார். ஆனால், அதன் முதலாவது பாதீட்டில் வெற்றியைப் பெற முடியவில்லை. இரண்டாவது தடவை பாதீட்டைச் சமர்ப்பித்து தமிழரசு கட்சியால் அதனை வெற்றி கொள்ள முடிந்தது. 

கொழும்பு மாநகர சபையின் கதையும் இது போன்றது. அங்குமிங்குமாக பேச்சு நடத்தி ஒருவாறு மாநகர சபையை அநுர குமரவின் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது. ஆனால், கடந்த மாதம் இடம்பெற்ற அதன் பாதீட்டு வாக்கெடுப்பில் தோல்வி கண்டது. எனினும், இரண்டாவது அமர்வில் எதிரணிகளில் இருந்த சிலரை உள்வாங்கியும், வேறு சிலரை அமர்வில் பங்குபற்றாது விலத்தியும் ஒருவாறு பாதீடு நிறைவு கண்டது. 

இதுபோன்று தெற்கில் வேறு பல சபைகளில் ஆளுங்கட்சி ஆறு மாதத்துக்குள்ளேயே பாதீட்டை நிறைவேற்ற முடியாது தோல்வி கண்டுள்ளது. இதற்கான ஒரு காரணம் தேர்தலின்போது தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகள் இப்போது கூட்டாகச் சேர்ந்த எதிர்த்து வாக்களிப்பது. எனினும், பின்கதவால் இடம்பெறும் டீல்கள் ஒருவாறு சில சபைகளை தக்க வைக்கின்றன. உள்ளாட்சிச் சபைகளின் பாதீடுகள் தோல்வியடைவது ஒருபோதுமே அரசாங்கத்தைப் பாதிக்காது. ஆட்சி தொடர்ந்தே நடைபெறும். 

ஆனால், தமிழர் தாயகத்து நிலைமை வேறானது. வன்னியில் கரைதுறைப்பற்று சபையின் தமிழரசு கட்சி பிரதிநிதி ஒருவர் பல்டி அடித்ததால் அங்கு பாதீடு தோல்வி அடைந்தது. பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற கூட்டு - இதனை எந்தவகை கூட்டு என்று சொல்லவே முடியாது. ஆட்சியில் இருக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக தமிழரசுக் கட்சி இச்சபையிலுள்ள அநுர குமரவின் ஐக்கிய மக்கள் சக்தியுடனும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யுடனும் இணைந்து பாதீட்டை தோற்கடிக்க முடியாது மண்கவ்வ நேர்ந்துள்ளது. 

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சியின் மேயரைத் தெரிவதற்காக டக்ளஸின் ஆதரவைப் பெற்ற தமிழரசுக் கட்சி,  பருத்தித்துறையில் அநுர குமரவின் கட்சியையும் எந்த கொள்கை அடிப்படையில் இணைத்துக் கொண்டு பாதீட்டைத் தோற்கடிக்க எத்தனித்தது என்பதை அதுதான் விளக்க வேண்டும். இதே அநுர குமரவின் கட்சியினர்தான் கரைதுறைப்பற்றில் தமிழரசுக் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியது. 

முன்னைய காலங்களில் தமி;ழரசுக் கட்சியின் தலைவர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகமோ தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலமோ அல்லது தெற்கில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ, சிறிமாவோ பண்டாரநாயக்கவோ இவ்வாறான தேர்தல்களில் ஈடுபட்டதாகவோ தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அறிக்கை விட்டதாகவோ இப்பத்தியாளருக்கு ஞாபகம் இல்லை. 

உள்ளாட்சி சபைகளின் பிரதான பணி அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி என்ற காலம் மாறி, இப்போது அரசியல் கட்சிகளின் கிளைகளினது அபிவிருத்தியாக கரணமடித்துள்ளதால், உள்ளாட்சிச் சபைகளின் அலங்கோல அரசியலையே காணமுடிகிறது. 

No comments