அநுர குமரவை மையப்படுத்தி தமிழரை குறிவைக்கிறது இனவாதம்!சிறீதரனை இலக்கு வைத்து தமிழரசை அழிக்கிறது இனபாசம்! பனங்காட்டான்
போயா தினத்தில் சில் அனு~;டிப்பதற்கு யாழ்ப்பாணம் செல்ல வேண்டியதில்லை என்ற அநுர குமரவின் கூற்றை இனவாதிகள் ஆயுதமாக எடுத்துள்ளனர். சிறீதரன் மீது தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் நடவடிக்கையை தங்களுக்கான பலமாக எடுத்து கட்சியை அழிக்க முயற்சிக்கின்றனர் இனபாசத்தால் உள்நுழைந்தவர்கள்.
ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய ஓர் உரையின் ஒரு சிதறலும், தமிழரசுக் கட்சியின் மூத்த எம்.பியான சிவஞானம் சிறீதரனின் நாடாளுமன்ற செயற்பாடுமே இப்போது பிரதான பேசுபொருட்களாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தின் பொதுநிகழ்;ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமர பொதுநிகழ்வொன்றில் கலந்து கொள்ளும்போது யதார்த்தமான கருத்தொன்றை தெரிவித்தார். இது தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் சிங்கள தேசத்தின் பௌத்த பக்தர்கள் இதனை இப்போதைக்கான தங்கள் ஆயுதமாக எடுத்துள்ளனர். அநுர குமர சொன்னது இதுதான்:
போயா நாட்களில் சிலர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றனர். ஜெயசிறீமகாபோதியை கடந்து இவர்கள் இங்கு செல்வது தங்கள் மதவழிபாட்டுக்காக அல்ல. மாறாக, வெறுப்பை பரப்புவதற்காகவே - என்பதுதான் அநுர குமர சொன்னது.
தென்னிலங்கையின் பல பகுதிகளிலும், யாழ்ப்பாணம் செல்லும் பாதையிலும் பல பௌத்த விகாரைகள் உள்ளன. இவைகளுள் சில வரலாற்றுப் பெருமை பெற்றவையாக அறிவிக்கப்பட்டவை. போயா தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு இடம்பெறும். இப்படியிருக்க, எதற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென்ற அநுர குமரவின் கேள்வி நியாயமானது.
திஸ்ஸ விகாரையில் காணி பிரச்சனை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் போயா தின வழிபாட்டை காரணம் காட்டி தெற்கிலிருந்து செல்வதால் பிரச்சனை பூதாகரமாவதை கருத்தில் கொண்டே அநுர குமர தமது கருத்தை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஒருதலைப் பட்சமின்றி கூறியிருக்கலாம். இது மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய விரும்புவர்களுக்கு அவலாகக் கிடைத்துள்ளது.
(1983 யூலை தமிழின அழிப்பு ஒரு போயா தினத்துக்கு மறுநாள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழரை கொலை செய்யவென திட்டமிடப்பட்ட நாள் இது. அப்போது அமைச்சராகவிருந்த சௌமிய தொண்டமான் இதுபற்றிக் குறிப்பிடுகையில் - போயா நாளில் சில், அடுத்த நாள் கொல் - என்று சொன்னது இவ்வேளையில் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.)
இனப்பிரச்சனையை வளர்க்கும் இடமாக அநுர குமர சிங்கள மக்களைப் பார்த்துச் சொன்னதை இனவாதத்தை வளர்க்கும் தூபமாக சிங்கள அரசியல்வாதிகள் கையில் எடுத்துள்ளனர். சிங்கள - பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அந்த சிங்கள பௌத்த மக்களை ஜனாதிபதி காட்டிக்கொடுக்கிறார் என்று குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர. கடற்படையில் உயர் அதிகாரியாக முன்னர் கடமையாற்றிய இவர், கோதபாய ஜனாதிபதியாக இருந்தபோது அவரைச் சுற்றியிருந்த வியத்மக குழுவின் பிரதானியாகவிருந்து கோதபாயவின் அழிவுக்குக் காரணமாகவிருந்தவர்களில் முக்கியமானவர்;.
விகாரை விடயங்களில் தலையிட முனைந்தால் என்ன நடைபெறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டி வருமென்று எச்சரித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த இவர் தாம் இப்போது அரசியலில் இல்லையென்று கூறியிருப்பது விநோதமானது.
மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் பேபி கூறியுள்ள கருத்து அவரது வரலாற்று அறிவின்மையை காட்டுகிறது. தமிழ் மக்கள் கதிர்காமத்துக்குச் செல்ல உரிமை இருப்பதுபோல சிங்கள் மக்களுக்கு வடக்கிலுள்ள நாகதீப விகாரைக்குச் செல்ல உரிமை உள்ளது என்று எச்சரித்துள்ளார். கதிர்காமத்தின் மூலத்தில் வேல் இருப்பதையும், இது தமிழர்களின் வழிபாட்டுத் தலம் என்பதையும் மறைக்க எத்தனிக்கும் நாமல் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக வர கனவு காணும் ஓர் இனவாதி.
இவ்வாறான இனவாதம் கக்குபவர்களுக்கு திஸ்ஸ விகாரை ஓர் ஆயுதமாக மாறாது பார்த்துக் கொள்ள வேண்டியது ஆட்சித் தலைவரான அநுர குமரவின் பாரிய பொறுப்பு. அவரின் ஒரு சொல்லே இனவாதத்தை கக்க ஆரம்பித்துள்ளது என்ற காரணத்தைக் கூறி திஸ்ஸ விகாரை விடயத்தில் நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்வதை அவர் தவற விடக்கூடாது என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.
தெற்கின் இனவாதத்துக்கு நிகரான பதவிமோகப் போராட்டம் ஒன்று இனபாசம் என்ற பெயரில் இப்போது வேகம் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூத்த எம்.பியும் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரனை மையப்படுத்தியதாக இந்த நடவடிக்கை பல கோணங்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்ற அரசமைப்புச் சபையில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதியாக இடம்பெற்றிருக்கும் சிறீதரன் அரச சார்பாளராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதுவரை நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இவ்விடயம் பற்றி ஏற்கனவே இப்பத்தியில் குறிப்பிடப்பட்டது.
தமக்குக் கிடைத்த இக்கடிதத்துக்கு பதில் எழுதும் கடப்பாடு சிறீதரனுக்கு இல்லை. அரசமைப்புச் சபைக்கு இவரை தமிழரசுக் கட்சி நியமிக்கவில்லை. நாடாளுமன்றத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளே இவரைத் தெரிவு செய்தன. எனவே இவர் கட்சியின் கடிதத்துக்கு பதில் அனுப்பாவிட்டால் இவர் மீது நடவடிக்கை எடுக்கும் தார்மிக உரிமை கட்சிக்கு இல்லையென்று கட்சியின் பிரமுகர்களே கூறுகின்றனர். தமிழரசின் பதில் தலைவரின் நிலைப்பாடும் இதுவே என்று நம்பிக்கையானவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, கட்சியின் தலைவர் பதவிப் போட்டியில் கட்சி உறுப்பினர்களாலேயே தூக்கி வீசப்பட்டு, வன்னி சத்தியலிங்கத்தின் கருணையால் பதில் செயலாளராகியுள்ள சுமந்திரன் எப்பாடுபட்டாவது சிறீதரனை பழிவாங்க எடுக்கும் முயற்சியில் இப்போது கையில் கிடைத்திருப்பது அரசமைப்புச் சபை விவகாரம் என்று மார்ட்டின் வீதி அலுவலகத்தின் மூத்தவர் ஒருவர் தமது சகபாடிகளிடம் தெரிவித்து வருகிறார்.
தமிழரசுக் கட்சியோடு மீண்டும் இணைய விரும்பியிருக்கும் ஜனநாயக தமிழர் கூட்டணியின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிறீதரன் மீது குற்றப்பத்திரிகையை வாசித்துள்ளார். தெற்கில் பலவேறு கட்சிகளிலும் இணைந்து வெளியேறியும் - வெளியேற்றப்பட்டும் அலைந்து திரியும் மகிந்தவின் முன்னாள் சகபாடியான தயாசிறி ஜெயசேகரவும் சிறீதரன் மீது ஏறிப்பாய்ந்துள்ளார். சுமந்திரன் சிறீதரன் மீது வைத்த குற்றச்சாட்டையே இருவரும் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.
எதிரணியினர் சார்பில் தயாசிறி ஜெயசேகர தமது தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் முக்கியமானவை. சிறீதரனை விமர்சிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் பல தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அண்மையில் இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியை எதிர்த்து இன்னொரு கூட்டில் இணைந்து பரப்புரை மேற்கொண்டவர். கருணைக் கொலையில் அகப்பட்டிருக்கும் மாகாணசபைக்கான தேர்தலை நடத்தினால் அதனூடாக தமது ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு சில ஆசனங்களாவது பெறலாம் என்ற நப்பாசையில் இப்போது தமிழரசுடன் தற்காலிகமாக இணைந்திருப்பவர்.
தயாசிறி ஜெயசேகர எப்போதுமே சிங்கள கட்சிகளின் பிரதிநிதியாக இருந்தவர். மகிந்த ராஜபக்ச ஆட்சியிலும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் முக்கிய பங்காற்றியவர். சிங்கள ஆட்சிகள் தமிழின படுகொலைகளை மேற்கொண்டபோது இராணுவத்தின் பக்கமும் சிங்கள கட்சிகளின் பக்கமும் நின்றவர். இப்போது தமிழினத்தை இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதுபோல வேசம் காட்டி சிறீதரனை அரசமைப்புச் சபையிலிருந்து விலகுமாறு கோரி வருகிறார். இது தொடர்பான இவரது உரைகளை எழுதிக் கொடுப்பவர் யாராக இருக்கலாம் என்ற ஊகம் அண்மையில் தமிழ் ஊடகம் ஒன்றில் நாசூக்காக தெரிவிக்கப்பட்டது.
இவ்விடத்தில் முக்கியமாக எழும் கேள்வியொன்று இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சனை பற்றி தமிழர் பகுதியிலுள்ள அநுர குமரவின் முக்கியஸ்தர் ஒருவர் பிரஸ்தாபித்திருந்தார். இது தொடர்பாக கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம் அவர்கள் அவசரமாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து மிகச்சூடான ஒரு கருத்தை நியாயமாக வெளியிட்டிருந்தார். தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமி;ழரசு குறித்த அநுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை என்று கட்சியின் நிலைப்பாட்டை எவரும் இலகுவாகப் புரியும் வகையில் தெரிவித்திருந்தார்.
இவர் இவ்வாறு கூறியதற்காக அநுர தரப்பினர் அமைதியாக இருந்துவிடப் போவதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக்கொண்டேயிருப்பார்கள். இங்கே நான் குறிப்பிட விரும்புவது இதுவல்ல. சிறீதரன் விடயமாக அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரே~; பிரேமச்சந்திரன் அநுர தரப்பினர் கூறிய அதே கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
தெற்கில் சிங்களக் கட்சிகளின் பிரதிநிதியாகவிருக்கும் தயாசிறி ஜெயசேகர தமிழரசுக் கட்சியின் ஆபத்பாந்தவனாகத் தம்மை காட்டி, சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியான சிறீதரன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி பதவி விலகுமாறு கோருவதற்கு யார் உரிமை அளித்தது?
தமி;ழரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை எவருக்கும் கிடையாது என்று அடித்துக்கூறிய அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எந்தவகையில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தயாசிறி ஜெயசேகரவும் சிறீதரன் சம்பந்தமான தமி;ழரசுக் கட்சி விவகாரத்தில் தலையிடவும் பகிரங்கமாக கருத்துக் கூறவும் அனுமதித்தார் என்பதை அறிவதற்கு அக்கறையுள்ளவர்கள் ஆர்வமாகவுள்ளனர்.

Post a Comment