வடக்கு சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவ வேண்டும்
வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் பிரதம பிரதிநிதி (Country Director) கென்ஜி குரோனுமாவுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது,
ஜெய்க்கா நிறுவனம் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாகாணத்தின் தற்போதைய தேவைகள் குறித்துப் பேசிய ஆளுநர், வடக்கு மாகாணம் தற்போது கழிவு முகாமைத்துவத்தில் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றது. அதை மேம்படுத்த வேண்டும். அதேபோன்று சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் மேம்பாடுகள் அவசியமாகின்றன, எனக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜெய்க்கா நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா,
இலங்கையில் தான் பொறுப்பேற்ற பின்னர் வடக்கு மாகாணத்துக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவெனவும், 'வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்' பங்கேற்பதற்காக இங்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, எமது புதிய திட்டங்கள் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன' என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், அண்மையில் வீசிய 'டித்வா' புயல் அனர்த்தத்தால் வடக்கின் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதுடன், வடக்கில் முதலீட்டாளர்களுக்கான அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுவதை அரசாங்கம் ஊக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment