இலங்கை தனியாரிற்கு விற்பனை?
இலங்கையில் தனியார் முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வந்திருந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் தற்போது வேகமாக தனியார் கூட்டிணைவை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்துள்ளார்;.
போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில், அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலம் 30 மாதங்களில் தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.
அடிக்கல் நடுகை நிகழ்வு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றிருந்தது.
எதிர்காலத்தில் தொழிற்சாலை அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக இயங்கவுள்ளது. இவ்விடத்தில் நான் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எமது மக்களின் அன்றாட நுகர்வுத தேவைக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென வடக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

Post a Comment