சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா தெரிவித்துள்ளார்
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சுழிபுரத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் , அண்மையில் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து, அக்காணியை சங்கத்தினருக்கு மீள கையளித்துள்ளோம்.
அதே போன்று பண்டத்தரிப்பு பகுதியில் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் , அதனையும் பிரதேச சபையிடம் மீள கையளித்துள்ளோம்.
அதுபோன்று , சங்கானை கிழக்கு பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேறி, அந்த காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியுள்ளேன்.
அது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலிப்பதாக எனக்கு உறுதியளித்துள்ளனர். மிக விரைவில் அந்த காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Post a Comment