புத்தாண்டில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் புத்தாண்டு தினமான இன்றைய தினம் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மருதங்கேணி வீரபத்திரர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மருதங்கேணியில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் வீட்டிற்கு முன்பாக நின்று போதையில் ஒருவர் கூச்சலிட்டு , வீட்டில் இருப்போரை வெளியே வருமாறு அட்டகாசம் செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து சென்ற பின்னர் , பிரதேச சபை உறுப்பினரின் கணவர் , வீட்டில் இருந்து வெளியேறி மருதங்கேணியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீரபத்திரர் ஆலயத்திற்கு அருகில் போதையில் வீட்டின் முன் நின்று கத்திய நபர் வழிமறித்து சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
கத்திக்குத்தில் காயமடைந்தவரை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment