இயற்கையின் இடர் தடகளத்தில் நல்லது கெடுவதும், நன்மையாவதும்! பனங்காட்டான
2004ம் ஆண்டு சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செயற்பட சந்திரிகா அரசு முனைந்தபோது அதனை ஆட்சேபித்து அமைச்சர் பதவிகளையும் துறந்து ஆட்சியிலிருந்து வெளியேறியது ஜே.வி.பி. இருபது ஆண்டுகளின் பின்னர் பேரிடர்ப் பணிபுரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களிடம் (தமிழர்களே அதிகம்) உதவியை நாடுகிறது அதே ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி. இதுவும் இயற்கையின் நியதி போலும்.
இயற்கையின் பெருஞ்சீற்றம் இரத்தினதுவீபம் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை எனும் குட்டித்தீவை முற்றுமுழுதாக சீரழித்துள்ளது.
75 வருட அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஓர் அணி - புரட்சிகர சிந்தனையாளர்களின் ஆட்சி ஆரம்பமாகி ஒரு வருட முடிவு காலத்தில் இவ்வாறான ஒரு பேரழிவை கையாளக்கூடியதாக திட்டமிடவில்லையென்பதை உள்நாட்டில் பலரும் கூறுமளவுக்கு நிலைமை உள்ளது.
அரச நிர்வாகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒன்று உள்ளது. இது நேரடியாக ஜனாதிபதி அநுர குமரவின் தலைமையில் இயங்குகிறது. இந்த அமைச்சின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளது. இதற்கான சட்டம் 2005ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி உட்பட்ட பதினேழு வகையான அனர்த்த வேளைகளில் உடனடிப் பணிகளை நிறைவேற்றுவதே இந்த நிலையத்தின் பிரதான பணி.
1913, 1940, 1947, 1950ம் ஆண்டுகளில் களனி, கல, ஜின், மகாவலி கங்கைகள் பெருக்கெடுத்து பாரிய அழிவை ஏற்படுத்தின. பின் நவீனத்துவ காலத்தில் 2003ம் ஆண்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 260 பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், ஆயிரமாயிரம் பேர் இடம்பெயர்ந்ததையும் அரசாங்கத் தகவல் பதிவு செய்துள்ளது. 1978ம் ஆண்டு சூறாவளி இலங்கை மக்களை வேறுபாடின்றி எதிர்பாராத அழிவுக்குள்ளாக்கியது.
இதன் பின்னரான பேரழிவை ஏற்படுத்தியது நேற்றுப்போல் இடம்பெற்ற சுனாமி. 2004 டிசம்பர் 26ம் திகதியான கிறிஸ்மஸ் நாளன்று இது இடம்பெற்றது. மின்னாமல் முழங்காமல் என்று கூறுவதுபோன்று இலங்கை வரலாற்றில் எதிர்பார்த்திராத அனர்த்தத்தை இது ஏற்படுத்தியது. வடக்கின் கரையோரத்திலிருந்து இலங்கை வரைபடத்தின் கீழ்மூலையிலுள்ள அம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் ஆறு மணித்தியாலத்தில் பல்லாயிரம் பேரை கொன்றொழித்த பேரலை இது. மக்களின் இருப்பிடங்கள், தொழிலகங்கள், வணக்கத் தலங்கள், வாழ்வாதார மூலங்கள், பாடசாலைகள், விவசாயப் பண்ணைகள் என்று எதனையுமே இது விட்டுவைக்கவில்லை.
இலங்கை அரசியலில் இதே சுனாமி சிலரை அடையாளம் காட்டவும் வைத்தது. அப்போது சந்திரிகா குமாரதுங்க தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது. ஜே.வி.பி. இதில் பங்காளராக அமைச்சுப் பதவிகளிலும் அமர்ந்திருந்தது. அநுர குமர, விஜித ஹேரத் போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். சுனாமி நிவாரணத்துக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நிதி வழங்கிய நாடுகள் சந்திரிகாவுக்கு ஏற்படுத்தின. அவரும் அதனை ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்து கட்டமைப்பை உருவாக்க முனைந்த வேளை அதனை ஆட்சேபித்த ஜே.வி.பி. தங்கள் அமைச்சுப் பதவிகளையும் துறந்து ஆட்சிக் கூட்டிலிருந்து வெளியேறியது. பொதுக்கட்டமைப்பில் விடுதலைப் புலிகளையும் இணைப்பதால் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதே ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக இலங்கையிலிருக்கும் அமெரிக்க தூதரகம் தனது அரசுக்கு அனுப்பி வைத்த தகவல் விக்கி லீக்சில் இடம்பெற்றுள்ளது. அப்போது சந்திரிகா அரசில் கலாசார மற்றும் மரபுரிமை அமைச்சராகவிருந்த விஜித ஹேரத் (தற்போதைய வெளிவிவகார அமைச்சர்) இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், ஆட்சியின் பங்காளர்களான தங்களின் ஆட்சேபணையை பொருட்படுத்தாது சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளை பொதுக்கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார் என்று குறிப்பிட்டதாக விக்கி லீக்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
விதிப்பயனோ அல்லது இயற்கையின் நியதியோ சுனாமியிலும் பார்க்க மிகமிக மோசமான பேரழிவை ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி புரியும் காலத்தில் ஏற்பட்டுள்ளது. தமது வல்லமைக்கு உட்பட்ட வகையிலும் கிடைக்கும் சர்வதேச உதவிகளைப் பயன்படுத்தியும் நாட்டை மீளெழுப்ப அரசு செயற்களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் உதவியை இது பகிரங்கமாகக் கோரியுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. தமிழ் மக்களினுடைய உரிமைப் போராட்டத்தை நசுக்க போர் வெறி கொண்ட மகிந்த அரசுக்கு பக்கபலமாக அப்போது நின்றது ஜே.வி.பி. சுனாமிக் கட்டமைப்பில் விடுதலைப் புலிகளை சந்திரிகா இணைத்துக் கொள்ள முயன்றபோது அதனை எதிர்த்து முறித்தழித்ததும் இதே ஜே.வி.பி. இப்போது, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புறப்பட்ட தமிழர்களின் உதவியை இது நாடி நிற்கிறது. இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்நாட்டில் அநுர அரசு மேற்கொள்ளும் பணிகள் வெளிநாடுகளில் இதன் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த நம்பிக்கையின் பயனாகவே உலகநாடுகள் அனைத்தும் கிள்ளிக்கொடு;க்காமல் இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் வேறொரு கட்சியின் ஆட்சி இலங்கையில் இருந்திருக்குமாயின் இந்தளவுக்கு சர்வதேச ஆதரவு கிடைத்திருக்காது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் ஊழல் ஒழிப்பில் முழுமையாக இறங்கி ஊழலற்ற அரசாட்சி ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசு பயணிப்பதே என்று துணிந்து சொல்லக்கூடியதாக இருக்கிறது.
ஒரு வருட ஆட்சிக்குள் அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன, மத பேதமற்ற நிர்வாகமாக முழுமையாக மாறவில்லை. பொதுமக்கள் நம்பக்கூடிய வகையில் தனது பாதையை இவ்வழியில் அது அமைத்து வருவது மட்டும் தெரிகிறது. இந்த நம்பிக்கையே சர்வதேசத்தின் பங்களிப்புக்கு அடிப்படைக் காரணம்.
அனைத்து மக்களையும் இணைத்தவாறு நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்த வேளையில் புயலும், வெள்ளமும், நிலச்சரிவும் ஒன்றுசேர்ந்து அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. மரணித்தோர் தொகை அடுத்த சில நாட்களில் ஆயிரத்தைத் தாண்டலாம் என எதிர்வு கூறப்படுகிறது. காணாமல் போனோர் தொகை பற்றி இப்போது எதுவும் கூறமுடியாத நிலை காணப்படுகிறது.
மலையகமே கூடுதலான பாதிப்பைக் கண்டுள்ளது. சில கிராமங்கள் அடியோது காணாமல் போயுள்ளன. துயில் கொண்டிருந்த பல குடும்பங்கள் புதையுண்டு போயுள்ளன. உடனடியாக தங்கள் தொகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தை முக்கியப்படுத்தி கொழும்பில் தங்கி விட்டனர். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறை கூறி ஊடகங்கள் ஊடாக தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முற்பட்டனர். தமிழ் அரசியல்வாதிகளும் இதில் வேறுபடவில்லை.
இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தாராளமாக உதவி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருபத்தையாயிரம் முதல் ஐம்பதினாயிரம் ரூபா வரையான நிவாரணம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் உடனடித் தேவைகளுக்கு மட்டுமே. பிரதேச வேறுபாடின்றி சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுவதை காணமுடிகிறது.
எனினும், எதிர்க்கட்சிகள் தாங்கள் நல்லவற்றுக்கும் எதிரானவர்களே என்பதைக் காட்டும் பாணியில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆக்கபூர்வமான பணிகள் எதனையும் இவர்கள் செய்வதாகத் தெரியவில்லை. பேரிடரைப் பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாமென எண்ணிச் செயற்படும் இவர்களை சர்வதேசம் கேள்விக்குறியாக்கியுள்ளது. நித்தம் நித்தம் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் எதிரணிகளை நிலைகுலைய வைக்கிறது. அதனால் ஏதாவது குற்றங்களை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடிகளுடன் இவர்கள் திரிகிறார்கள்.
நிவாரண திட்டமிடலின்மை, தாமதமான நிவாரணப்பணி என்பவைகளை முன்னிறுத்தி ஆட்சித் தரப்பை மக்கள் செல்வாக்கிலிருந்து இறக்கி விடலாமென இவர்கள் எண்ணியது தலைகரணமாக்கியுள்ளது, சர்வதேச நிவாரணமும் அரசாங்கத்தின் வீச்சான செயற்பாடும்.
மறுபுறத்தில், ஆட்சி புரியும் தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களையும் ஒரே நோக்கில் இருத்தி தனது பணிகளை மேற்கொள்கிறது. அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக இதனை எவரும் பார்க்கவில்லை. பேரிடரிலிருந்து நாட்டை மீட்டு அதனை நவீன இலங்கையாக கட்டியெழுப்ப காலம் தேவையென்று கூறி பொதுத்தேர்தலை குறைந்தது பத்தாண்டுகளுக்காவது பின்போட (ரில்வின் சில்வாவின் ஆசையும் இதுதான்) தேசிய மக்கள் சக்திக்கு இதன் நிவாரணப்பணி வரப்பிரசாதமாக அமையலாம். மாகாண சபைத் தேர்தல் பற்றி இப்போதைக்கு எவரும் வாய் திறக்க முடியாத நிலைமை வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி பேரிடர் காலத்தில் மேற்கொள்ளும் சாதகமான செயற்பாடுகளும், எதிர்க்கட்சிகளின் இயக்கமற்ற குற்றக் கூச்சல்களும் நாட்டின் எதிர்காலம் எதுவாகும் என்பதை தீர்மானிக்கப்போகும் சக்திகள். இதில் சர்வதேசத்தின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கும் - புலம்பெயர்ந்தவர்களின் பங்கும்கூட.

Post a Comment