அனுர அரசு தவறணைகளிற்கு ஆப்பு!

 




மதுபான விற்பனை நிலையங்களை ஊக்குவித்து கள்ளுத் தவறணைகளையும் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலைகளையும் தற்போதைய அரசு மூடுவிழாச் செய்கிறதென அனுர அரசின் மீது வடக்கிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் ஒருவரது முறைப்பாடு இது.

தென்பகுதியில் கித்துள் மரத்திலிருந்து கள் இறக்கிக் அதனைக் காய்ச்சி கித்துள் கட்டி செய்வோருக்கு வரி இல்லை.

நிதி அமைச்சு அண்மையில்  தவறணை ஒன்றுக்கான வரியை 5 இலட்ச ரூபாவாக  அதிகரித்துள்ளது. 

போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் தலா 25 இலட்ச ரூபா வரி கட்ட வேண்டுமென அறிவித்துள்ளது.

இதன் மூலமாக கள் இறக்கும்  தொழில்துறை அழிவைச் சந்திக்கப் போகிறது.

பனை,தென்னை ஆகியவற்றிலிருந்து கள் இறக்கும் தொழிலை நம்பிப் பல ஆயிரம் குடும்பங்கள் இன்றும் உள்ளன.

அரசாங்கம் வரி வருவாயைக் கூட்டுவதற்காக நியாயமற்று  இத்தகைய வரியை அதிகரிக்கின்றது.

கள்ளுக் குடித்தால் எங்களுடைய காசு எங்களிடம் நிற்கும். சாராயம் குடித்தால் எங்களுடைய காசு வெளியேறும் எனச் சொல்வார்கள். ஆகவே சுதேசிய பொருளாதார விருத்திக்குக் கள் இறக்கும் தொழில் பெரிதும் கைகொடுக்கின்றது.

1972 ஆம் ஆண்டில் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்க அமைப்பு உருவாகியது. வீடுகளில் கள் விற்கக் கூடாது. தவறணைகளில் மட்டும் தான் விற்க வேண்டுமென்ற நடைமுறை உருவாகியது.

இதன் மூலமாகக் கூட்டுறவுத்துறை வடக்கு மாகாணத்தில் வலுப் பெற்றது. 

அப்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர்கள் தமக்கும் இது போன்ற கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்கள்.

எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக அரச நிர்வாக முறையை மாற்றியமைக்கவில்லை. 

அங்கு கள்ளுத் தவறணைகள் ஏலம் போட்டுப் பணம் கொழுத்த முதலாளிகள் ஏலம் போட்டுத் தவறணைகளைப் பெற்றார்கள். பணம் ஈட்டினார்கள்.

இன்று 53 வருடங்களைக் கடந்தும் கிழக்கில்  இக் கோரிக்கை கவனிக்கப்படாமலே உள்ளது.

வரி வருமானம் மூலமாக  அரச நிதிக் கருவூலத்தை நிரப்ப முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு ஏழைத் தொழிலாளர்களது வயிற்றில் அடிக்காமல்  இருக்க  வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments