கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது சுய முரண்பாடு


13ம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கி போடும் என சொல்லிப்போட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்கிறார். இது சுய முரண்பாடு என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரை கையேற்பதில்லை என்ற இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கம்,தேவையற்ற கால தமாதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும். 

மாகாண சபை தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம். சமஷ்டியை பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்து ஆச்சரியமளிக்கிறது.

கலந்துரையாடலை ஆரம்பித்து நானே. கலந்துரையாடலின் இறுதியில் சமஸ்டியை பற்றி பேசினோம். பல விடயங்களை பேசினோம். சந்திப்பு முடியுற தருணத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்கு தெளிவுபடுத்தினோம்.

மாகாண சபையை பொறுத்தவரை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது.

வயிற்றில் பிறந்த பிள்ளை என சொல்லவில்லை. இந்தியாவின் சிந்தனையில் வந்த பிள்ளை என்றேன். அதை வலியுறுத்தவே மகஜரும் கையளித்தோம்.

அதேபோல குறித்த சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி சமஷ்டி தான் என்பதை தெரிவித்தோம். மகஜரில் இந்த விடயம் இருக்கிறது.

நாங்கள் பொய் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். நான்  உண்மையை தான் கூறுகிறேன். சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித்தலைவர்கள் இதை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள்.

சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை. இந்தியா இதற்கு உதவ வேண்டும் என சந்திப்பில் சொன்னோம்.

நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். செயலிலேயே அதை செய்வார்கள்.

நாங்கள் சமஸ்டி கட்சி, ஆகவே  சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? நாங்கள் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன்.

13ம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கி போடும் என சொல்லிப்போட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்கிறார். இது சுய முரண்பாடு.

மாகாண சபை முறைமை தீர்வு என்றோ முழுமையாக ஏற்கிறோம் என்றோ ஒரு காலத்திலும் தமிழ் அரசுக் கட்சி சொன்னதில்லை.

உண்மைக்கு புறம்பான முறையில் பேசுவது அரசியல் ஜனநாயகத்துக்கு முரண் என்றார்.

No comments