சம்பூரில் கரையொதுங்கியது இந்தியா விண்ணில் செலுத்திய ரொக்கட்டா
திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் பாரிய அளவிலான மர்மப் பொருள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் ஒரு பகுதி என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக திருகோணமலை ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் இந்த உலோகப் பாகம், நீரோட்டத்தின் காரணமாக சம்பூர் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
இதனை அவதானித்த மீனவர்கள் உடனடியாகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர்.
தற்போது கரை ஒதுங்கியுள்ள பாகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, சம்பூர் பொலிஸ் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் கடற்படை வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்த ஆய்வுகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் அருகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரொக்கட்டுகள் விண்ணை நோக்கிப் பாயும்போது, புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்வதற்காகப் பல்வேறு நிலைகளில் அதன் பாகங்கள் கழன்று விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டின் 'ஹீட் ஷீல்ட்' (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதியே இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுகளின் சிதைவுகள் அவ்வப்போது இலங்கை மற்றும் மாலைத்தீவு கடற்பரப்புகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment