யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் - யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கு , மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ள நிலையில் , விளையாட்டரங்கு வேண்டும் என கோரி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சென்.போஸ்கோ ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக , விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய சிலரும் , சிறுவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் சிலரும் இணைந்து போராட்டத்தை ஆரம்பித்து, அங்கிருந்து மாவட்ட செயலத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
பேரணியாக சென்றவர்கள் , பழைய பூங்கா பகுதிக்குள் சென்று , அங்குள்ள கட்டங்களை கட்டி , இந்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள போது , தற்போது சமூக சூழல் தொடர்பில் கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள் என கேள்வியும் எழுப்பி இருந்தனர்.
பின்னணி.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கடந்த 05ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் , 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி , அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்நிலையில் , யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் , பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கினை உடனடியாக நிறுத்துமாறு கோரி வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கின் மீதான விசாரணையின் போது, மைதானம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு, 14 நாட்களுக்கு இடைக்கால தடை கட்டளையை வழங்கிய மன்று , எதிர்தரப்பினை தமது ஆட்சேபணைகள் , பதில்களை முன் வைக்கவும் காலம் வழங்கியுள்ளது.






Post a Comment