யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து - மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆபத்தான முறையில் காரினை செலுத்தி வந்த நபரை வழிமறித்துள்ளனர்.
பொலிசாரின் கட்டளையை மீறி காரினை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றமையால் , குறித்த காரை பொலிஸார் துரத்தி சென்றனர்.
அதன் போது கார் கட்டுப்பாட்டை இழந்து நவாலி மூத்தநயினர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடை தொகுதி ஒன்றிற்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானது.
அதில் தையல் கடை ஒன்றினுள் நின்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்களால் அவர்கள் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment