யாழில். கொல்களத்தில் இருந்து மீட்கப்பட்ட மாடுகள் - யாழ். நகர் பகுதியில் இறைச்சிக்கு தட்டுப்பாடு
நத்தார் தினத்தில் தமது வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மண் அள்ளி போட்டு விட்டதாகவும் அதனால் தாம் இன்றைய தினம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாட்டிறைச்சி கடை நடாத்தும் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான கொல்களத்தில் அனுமதியற்ற முறையில் மாடுகளை இறைச்சியாக்கும் நோக்குடன் இரண்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகளை கட்டி வைத்திருந்த நிலையில் , மாநகர சபையினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அந்த மாடுகளை மீட்டிருந்தனர்.
இதனால் நத்தார் தினமான இன்றைய தினம் யாழ் . நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாது போனது. குறித்த கடைகளுக்கு இந்த கொல்களத்தில் மாடுகள் இறைச்சியாக்கப்பட்டே எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் , கடைகளில் இறைச்சி இல்லாததால் , யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , சில கடைகளில் வேறு கொல்களத்தில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
மாடுகளை இறைச்சியாக்க மாநகர சபையினர் தடுத்துள்ளதை அறிந்து , மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் , இன்றைய தினம் வியாபாரம் அதிகமாக நடக்கும் என நினைத்து அதிக விலைகளுக்கு மாடுகளை வாங்கியுள்ளோம். இன்றைய தினம் அவற்றை விற்க முடியாது விட்டால் தாம் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எமது வியாபாரத்தில் மண் அள்ளி போடாதீர்கள் என மாநகர சபையினருடன் தர்க்கப்பட்டனர்.
மாநகர சபையினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் மாடுகளை அழைத்து செல்லுங்கள் என உறுதியாக கூறியுள்ளனர்.

Post a Comment