கோப்பாய் - நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை
நல்லூர் பிரதேச சபை - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லையோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர்.
வாய்க்கால் தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியாது.
அதன் போது முதலில் இந்த வாய்க்கால் தொடர்பில் கோப்பாய் பிரதேச சபைக்கு எதுவும் தெரியாது. அதாவது வெட்டினதும் தெரியாது , மூடினதும் தெரியாது. இது பிரதேச சபைகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதனை தெளிவு படுத்துவதாக தெரிவித்தார்.
வாய்க்காலை மூடிய தரப்பு
அதன் பின்னர் வாய்க்காலை தாம் தான் மூடியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். தமது பகுதிக்குள் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் நிற்கிற நிலையில், புதிதாக ஒரு பகுதி வெள்ள நீரை மேலும் எமது பகுதிக்கு அனுப்புவதனை ஏற்க முடியாது. அதனாலயே மூடினோம்.
எந்த வெள்ளநீர் எமது பிரதேசத்தால் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி நீரேந்து பிரதேசம் வரையில் ஒழுங்கான வடிகால் அமைப்பை செய்து. அதனூடாக வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதனை விடுத்து தாழ் நிலங்களில் வசிக்கும் எமது காணிகளுக்குள் வெள்ளநீரை மடைமாற்றி விட கூடாது என தெரிவித்தனர்.
மூன்று வருடங்களாக தான் வெள்ளம்
அதேநேரம் , வெள்ள வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது ,
கடந்த மூன்று வருடங்களாக தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். யாழ்ப்பாணத்தையே உலுக்கிய நிஷா புயலின் போது கூட எங்கள் வளவுக்குள் வெள்ளம் நிற்கவில்லை.
தற்போது வெள்ளம் நிற்க காரணம் பருத்தித்துறை வீதி புனரமைப்பின் போது இந்த பிரதேசத்தில் இருந்த நான்கு மதகுகள் முற்றாக மூடி விட்டார்கள். தற்போது தற்காலிக வாய்க்கால் வெட்டிய இடத்தில் கூட வடிகால் வாய்க்கால் இருந்தது. வீதி அகலிக்கும் போது , மூடி விட்டார்கள்.
அதுமட்டும் இன்றி , தற்காலிக வாய்க்காலை அமைத்து வெள்ளநீரை விட்ட மதகு புனரமைப்பின் போது மதகுக்கு அருகால் , மண் போட்ட பட்டு தற்காலிக வீதியை அமைத்திருந்தனர். மதகு கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் , அந்த மண் பாதையை அகற்றாமல் சென்று இருந்தனர்.
அதனை அடுத்து அதற்கு அருகில் உள்ள தனியார் , அப்பகுதியை சுவீகரித்து மதிலையும் கட்டி விட்டார். அதனால் வீதியால் வழிந்தோடி வந்த நீர் தனியாரின் மதிலினாலும் , மதகு கட்டுவதற்காக போடப்பட்ட மண் மேட்டினாலும் நீர் ஓடாது எமது பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனாலயே இம்முறை மதகு வரையில் சுமார் 30 மீட்டர் தூரம் வாய்க்கால் போன்று , மண்ணை வெட்டி விட்டோம். என தெரிவித்தனர்.
வீதி புனரமைப்பின் போது மதகுகள் பாலங்களை மூடி விட்டார்கள்
அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவிக்கையில் ,
குறித்த வீதியில் காணப்பட்ட மதகுகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்ப்பில் நாம் RDA யிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் தமக்கு வீதிக்கு மாத்திரமே நிதி கிடைப்பதாகவும் , மதகுகள் பாலத்திற்கு வேறாக ஒதுக்கப்படும். இந்த இடத்தில் ஒரு மதகுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர்.
எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக நீரேந்து பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் நீர் , செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் தேங்கும். தற்போது அப்பகுதி மத்திய அரசின் அனுமதிகளுடன் மண் போட்டு நிரவப்பட்டு வருகிறது.
மத்திய அரசு காலம் காலமாக அபிவிருத்தி எனும் பெயரில் நீரேந்து பிரதேசங்களையே நிரவி கட்டடங்களை கட்டி வருகிறது. அவற்றினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் , மாகாண சபை , உள்ளூராட்சி தேர்தலைகளை தாமதப்படுத்தி வருகின்றனர்.
தற்போது கூட இந்த வெள்ள நீர் எமது பகுதியால் வெளியேறுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி பகுதியில் இருந்து வடிகால் அமைப்பினை செய்து உரிய முறையில் வெளியேற்ற வேண்டும்.
ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கையால் இன்னொரு தரப்பு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள கூடாது.
அந்தவகையில் நேற்றைய தினம் இந்த இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் வருகை தந்து , பார்த்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும் , அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதால் , உடனடியாக மத்திய அரசிடம் இருந்து நிதியினை பெற்று இப்பகுதியில் எந்த தரப்பு மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய வடிகால் அமைப்புக்களை மேற்கொண்டு உரிய முறையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment