தையிட்டி விகாரைக்குள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டுமானம் - 3ஆம் திகதி போராட வருமாறு காணி இழந்தவர்கள் கோரிக்கை


தையிட்டி விகாரைக்கு முன்பாக போராடும் எம்மிடம் விகாரை காட்டும் போது எங்கே போனீர்கள் ? என கேட்பவர்களால் , விகாரை கட்டி முடிந்த பின் மேலும் இருந்த காணிகளுக்குள் புதிய கட்டுமானங்களை எம் போராட்டங்களை மீறியும்  கட்டும் போது அதனை தடுக்க முடியவில்லை என்பதனை உணர வேண்டும் என விகாரைக்காக காணி இழந்த காணி உரிமையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். 

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர் 

மேலும் தெரிவிக்கையில், 

எமது காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி , சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு எதிராக நாங்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றன போதிலும் ,  எமக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த விகாரைக்குள் புதிய கட்டுமானம் செய்யப்பட்டு , புதிய புத்தர் சிலை ஒன்றினை எதிர்வரும் 03ஆம் திகதி நிறுவ உள்ளனர். 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் விகாரை முன்பாக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு ஆதரவு தெரிவித்து  , அனைத்து தரப்பினரும் எம்முடன் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என கோருகிறோம். 

எங்கள் 18 பேருடைய தனியார் காணிகளை அடாத்தாக அபகரித்தே சட்டவிரோதமான முறையில் விகாரை கட்டப்பட்டுள்ளது. 

உயர் பாதுகாப்பு வலயமாக இந்த பகுதிகள் இருந்த போதே , விகாரை கட்டப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஓவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நாம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். 

எமது போராட்டத்திற்கு மதிப்பளிக்காது விகாரையை சுற்றியுள்ள காணிகளிலும் தொடர்ந்து சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. 

No comments