நைஜீரியாவில் 25 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர்!
நைஜீரியாவின் வடமேற்கே அமைந்துள்ள கெப்பி மாநிலத்தில் நேற்றுத் திங்கட்கிழமை துப்பாக்கிதாரிகள் 25 பெண் மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வரையும் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் சமீப ஆண்டுகளில் ஆயுதமேந்திய குழுக்கள் பணத்தைக் கோரி பள்ளிகளில் இருந்து மாணவர்களைக் கடத்தும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், சோதனையின் போது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் அவர்கள் அரசு பெண்கள் விரிவான மேல்நிலைப் பள்ளியைத் தாக்கினர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் 25 பெண் மாணவர்களை கடத்திச் சென்றனர். தாக்குதலை எதிர்த்தபோது பள்ளியின் துணை முதல்வர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்ததாகவும் ஒரு அறிக்கை கூறுகிறது.
கூடுதல் தந்திரோபாயப் பிரிவுகள் உட்பட அதிகாரிகள், இராணுவம் மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்களின் உதவியுடன் பள்ளிக்கு அருகிலுள்ள தப்பிக்கும் வழிகளிலும் காடுகளிலும் துப்பாக்கி ஏந்தியவர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment