யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது.
இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் 2023 ல் யாழ் மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது.
இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் 22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத நிலையில் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 10 பேர் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது 80 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலர்,
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை இறப்புகள் பதிவாகவில்லை.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் கழிவுகளை அகற்றும் போது தரம் பிரித்து உரிய முறையில் அகற்ற வேண்டும் .
அதேபோல் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தரம் பிரிக்காத கழிவுகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதோடு உரியவர்களே தரம் பிரித்து தருமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் .
யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்பத்திரன , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment