ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது:யாழ் ஊடக அமையம்!

 






வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது என யாழ் ஊடக அமையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இன்று புதன்கிழமை ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஊடகக் கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரதான ஊடக அமைப்புகள் 23 பேர் கொண்ட மீளாய்வுக் குழுவில் இணைக்கப்படாமை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்த ஊடகத் தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக, உரிய முறையில் ஊடக அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்படவில்லை. அத்துடன் 2023 ஆம் ஆண்டு இக் கொள்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு அது கைவிடப்பட்டிருந்தது.


இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்தக் கொள்கையை சில திருத்தங்களுடன் மீளவும் ஆய்வுக்கு உட்படுத்தி பூர்த்தி செய்துள்ளது.


இருப்பினும், தேசிய ஊடகக் கொள்கை யுனெஸ்கோ ஊடக சுதந்திரக் கொள்கைகளுடன் இணங்கவில்லை என்பது தெரிகிறது. இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுதந்திரம் பற்றிய பெரும் கவலைகளை எழுப்புள்ளது.


பல நாடுகளில் பொதுச் சேவை ஊடகத்தை ஒழுங்குபடுத்துதல், ஊடக உரிமையில் வெளிப்படைத் தன்மையை அமுல்படுத்துதல் மற்றும் கலப்பு ஊடக உரிமையைக் கட்டுப்படுத்துதல் அதாவது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இரண்டையும் ஒரே நிறுவனம் வைத்திருக்கும் முறைமையை தேசிய ஊடகக் கொள்கை உரிய முறையில் கட்டுப்படுத்தவில்லை.


பன்முகத்தன்மை சுதந்திரமான பத்திரிகையை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக கலப்பு ஊடக உரிமை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இலங்கையில் உள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் அநேகமானவை அரசியல் பின்னணி கொண்டவை. வேறு சில ஊடக நிறுவனங்கள் அரசியல் குடும்பங்களுக்குச் சொந்தமானவை. ஆகவே அரசியல் பின்னணி கொண்ட ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊடகத் தேசியக் கொள்கை அமையவில்லை என்பதை பகிரங்கமாகக் கண்டிக்கிறோம்.


ஊடகத் தேசிய கொள்கை பற்றி ஊடக அமைப்புகள் உள்ளிட்ட 21 செயற்பாட்டு அமைப்புகளுடன் உரையாடியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.


ஊடக அமைப்புகள் கலந்துரையாடியதை மறுக்கவில்லை. ஆனால் ஊடக அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக போர்க்காலத்திலும் 2009 இற்கு பின்னரான சூழலிலும் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் பற்றி விசாரணை நடத்த சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றப்படவில்லை. மாறாக அது சட்டம் சார்ந்த விடயம் என்றும், ஊடகத் தேசிய கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் அதற்குரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.


அதேநேரம், ஊடகவியலாளர்கள் எந்த அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றனர் என்ற சரியான புரிதலும் ஊடகத் தேசிய கொள்கையில் இல்லை. 2023 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊடக தேசிய கொள்கையை மீளாய்வு செய்து திருத்தம் மற்றும் புதிய விடயங்களை சேர்க்கும் நோக்கில் அநுர அரசாங்கம் உருவாக்கிய 23 பேர் கொண்ட குழுவில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைக்கப்படவில்லை.


இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடக அமைப்பான உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அந்த 23 பேர் கொண்ட குழுவில் இணைக்கப்படவில்லை.


அதேவேளை ஒப்பாசாரத்துக்காக கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்கள அதிகாரிகள் சிலர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவனியா மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து ஊடகத் தேசியக் கொள்கை தொடர்பாக விளக்கமளித்தனர்.


தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஊடகத் தேசிய கொள்கை தயாரிக்கப்படவில்லை. அதேநேரம் அரசாங்க ஊடகங்களை சுயாதீனமாக செயற்படுத்தும் உரிய திட்டங்கள் ஊடக தேசிய கொள்கையில் இல்லை. அரசாங்கத்துக்குச் சாதகமான முறையில் அரச ஊடகங்கள் செயற்படுத்தப்படும் முறைமைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன.


அந்தவகையில், அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடக தேசிய கொள்கையை ஏற்க முடியாது என்றும், ஊடக அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு புதிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் யாழ் ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments