கிளிநொச்சியில் தண்ணீர் பிரச்சினையாம்?
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட
மக்கள் மிகவும் ஆபத்தான நோய் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் தடை ஏற்பட்டுள்ளது எனமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (22) அவரது அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு
அவர் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெற்று
சுத்திகரித்து வழங்கி வருகிறது. ஆனால் கிளிநொச்சி குளமானது கிளிநொச்சிநகரின் அனைத்து கழிவுகளும் வந்து சேர்கின்ற குளமாக காணப்படுவதோடு, ரை ஆறு
வழியாக இரத்தினபுரம் பாலம் ஊடமாக கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகள் உட்பட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பல கழிவுகள் கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. ஆத்தோடு கிளிநொச்சி குளம் மற்றும் அதன் நீரேந்து பகுதிகளை
ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களின் மலக்கழிவுகளும் கிளிநொச்சி குளத்திற்கு வருகிறது.
இதன் காரணமாக கிளிநொச்சி குளம் கழிவுகள் நிறைந்த குளமாக காணப்படுகிறது.
இந்த குளத்திலிருந்தே நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு விநியோகிப்படுகிறது. ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினரிடம்
காணப்படுகின்ற நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இக் கழிவுகள் அனைத்தையும் முழுமையாக சுத்திகரிக்கும் இயலுமை காணப்படவில்லை. அதனால்
கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும்
அறிந்த விடயமாகும்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது. அதிகளவு விவசாய நடவடிக்கைகளில் அதிகளவு இராசயனங்களின்
பயன்பாட்டால் இவ்வாறு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக
அந் நீரை குடிநீராக பயன்படுத்துகின்ற மக்களில் பலர் நிரந்தர சிறுநீரக நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக கண்;டாவளை பிரதேசத்தில்
மூன்று வீதமான மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது இதற்கு பிரதான காரணம் குடிநீரை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த மக்களை
பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும். இந்த பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய பொறுப்பு மாவட்டத்தின் உள்ள பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் உண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக ஆயிரக்கணக்கான
பொது மக்களின் சிறுநீரகங்களை அடைவு வைக்க முடியாது.
எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 24 வீதமான மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதனை சுத்தமான பாதுகாப்பான நீராக விநியோகிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.இதற்கு முன் எவர் தடை
ஏற்படுத்தினால் அவர்களை கருத்தில் எடுக்காது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க பொறுப்பு வாய்ந்தவர்க்ள முன்வர வேண்டும். அத்தோடு
பரந்தன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் கௌதாரிமுனை சுற்றுலாத்தளம்
என்பவற்றுக்கு நீர் வசதியினை வழங்கின்ற போதே மாவட்டம் அபிவிருத்தியை நோக்கி செல்லும் அறிவியல் நகர் பல்லைகழகம், இரண்டு பெரிய
ஆடைத்தொழிற்சாலைகள், ஆனையிறவு உப்பளம் போன்றவற்றுக்கும் தடையின்றிய நீர்
விநியோகம் அவசியம் இவை மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயம். எனவே
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுத்தமான குடிநீர் விநியோகத்தை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கிளிநொச்சி கழிவுகள் தேங்கி நிற்கின்ற குளமான கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெறுவதனை நிறுத்தி இரணைமடுவிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து கிளிநொச்சி மக்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் விநியோகத்தை
உறுதிப்படுத்துமாறு கோருகின்றேன். இரணைமடு குளத்தை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் ஏக போக உரிமை கோர அனுமதிக்க முடியாது அவர்களின்
நலன்களுக்காக மாவட்ட மக்களின் நலன்களை பகடையாக்க முடியாது இரணைமடு
கமக்கார அமைப்புகளின் சம்மேளம் என்பது சட்டரீதியான பதிவுக்குட்பட்ட ஒரு
அமைப்பு அல்ல என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஊடகவியலாளர் ஒரு
தகவலை பெற்று வெளிப்படுத்தியிருகின்றார். எனவே சட்டரீதியற்ற ஒரு அமைப்பின் கருத்துக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற
குடிநீரை விநியோகிக்க அனுமதிக்க முடியர்து. எனவே இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்படவில்லை எனின் பாதிக்கப்பட்ட மக்களுடன் வீதியில் இறங்க
வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment