யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்


யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் , வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளில் சிலர் மனிதாபிமானமின்றி கட்டுமானங்களை கட்டி வந்துள்ளமை , மற்றும் மண் மேடுகள் அமைத்து வைத்துள்ளமையாலையே வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் , யாழ் . மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணத்தில் கடந்த 03 தினங்களாக தொடர் மழை பெய்துள்ளது. மூன்று நாட்களும் 160.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது 

மழை காரணமாக 10 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 05 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. 

குறிப்பாக வேலணை , உடுவில் சங்கானை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. 

சிலர் மனிதாபிமானமின்றி வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் , மதகுகளை அடைத்தமை காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாது வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்தனர். எனவே வெள்ள நீர் வடிந்தோடும் பகுதிகளை தடை செய்ய வேண்டாம் என கோருகிறோம். 

அத்துடன் அவசர உதவிகளுக்கு 021 222 117 117 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். எதிர்வரும் நாட்களில் பகல் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் , பொதுமக்கள் அது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

No comments