கடந்த 10 மாதங்களில் விபத்துக்களில் சிக்கி 2ஆயிரத்து 343 பேர் உயிரிழப்பு


நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2210 வீதி விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பண்டிகை காலங்களின் போது வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்களுக்காக செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

பாடசாலை விடுமுறை என்பதாலும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் பெருமளவானோர் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர். 

அவ்வாறு குடும்பங்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வோர் வாகனங்களின் தன்மை, வாகனத்தின் இயந்திரம் தொடர்பிலும் அவதானம்  செலுத்துவது அவசியம்.

அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4360 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.  

எதிர்வரும் பண்டிகை காலங்களில்  விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

கவனயீனமாகவும், மது போதையுடனும் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் சுமார் 260 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் மீட்பு முயற்சிகள் காரணமாக, அதே காலகட்டத்தில் 195 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன.

காப்பற்றப்பட்டவர்களில் 135 பேர் இலங்கையர்கள் என்றும் 60 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நேசிலாபம் தெதுறு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்தபோது, கிரிபத்கொட-மாகொலையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கிய உயிரிழந்தனர்.

இந்த நிலையில் பாடசாலை விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதிஉச்ச எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, அவர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

No comments