18வது நாளாகத் தொடரும் திருகோமலை முத்து நகர் மக்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் சனிக்கிழமை (04) 18 ஆவது நாட்களாக தொடர் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இலங்கை துறை முக அதிகார சபையின் காணி என அப்பட்டமாக வழங்கி வைக்கப்பட்டதையடுத்து இதனை மீளப் பெறக் கோரி இதனை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த முத்து நகர் விவசாய காணியில் சுமார் 800 ஏக்கர் அளவில் நில அபகரிப்பு செய்யப்பட்டு இருநூறு ஏக்கருக்கும் மேல் தற்போது சுத்தமாக்கப்பட்டு விவசாய குளங்களை மூடிய நிலையில் சூரிய மின் சக்திக்காக கையகப்படுத்தியுள்ளனர்.
இதனால் விவசாயத்தை நம்பிய நிலையில் தாங்கள் மேற்கொண்ட ஜீவனோபாயமான விவசாய செய்கை முழுதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து "முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாமும் ஒன்றினைவோம்" போன்ற பதாகையினையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் விவசாய பூமியை பெற்றுத் தரக் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதம மந்திரி அலுவலகம் வரை போராடிய விவசாயிகளுக்கு இற்றை வரைக்கும் தீர்வு கிட்டவில்லை என தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இறுதியாக பிரதமர் அலுவலகம் முன் இடம் பெற்ற போராட்டத்தின் போது பிரதமர் தங்களுக்கு பத்து நாட்களுக்குல் தீர்வு வழங்குவதாக கூறியும் இன்னும் வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத்தா, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு , இந்திய கம்பனிகளின் நில மற்றும் வள திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவோம் போன்ற வாசகங்களையும் ஏந்தியவாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இலங்கை விவசாய சம்மேளனம்,மக்கள் போராட்ட முண்ணனியினரின் ஒத்துழைப்புடன் இப் போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயிகள் இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு தெரிவித்தனர்.
தரப்பட்ட பத்து நாட்களில் போதுமான விபரத்தை திரட்ட முடியாததால் இம் மாதம் (ஒக்டோபர் 2025) 20ம் திகதி வரை காலக்கெடு தருமாறும் விவசாயிகளுக்காக இவ்வருடத்துக்கான நஷ்ட ஈட்டை பெற்றுத் தருவோம் என வாய் மொழி மூலமே சொன்னார்கள் இதனை நம்ப முடியாது .
இவ்வாறு பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஜூலை மாத்திலும் செப்டம்பர் மாதத்திலும் பல முரணான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
352 விவசாயிகளில் வெளிநாடு சென்றவர் அரச ஊழியர்களுக்கு தர முடியாத போன்ற கதையும் நிலவுகிறது வருமானம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
நாங்கள் பெண் மணி பிரதமரை நம்பினோம் தீர்வை தருவதாக ஆனால் நடக்கவில்லை. வயிற்றுப் பசிக்கு செய்து வந்த விளை நிலங்களை தாருங்கள் என்றே கேட்கிறோம் எனவும் கூறினார்.
Post a Comment