நிகழ்கால அரசியல் புதிர் மாகாணசபை தேர்தல்! பனங்காட்டான்


முன்னைய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் தங்கள் பெயரை வருமானத்துடன் தக்க வைப்பதற்காகவே மாகாண சபை தேர்தல்களை நோக்கி கூப்பாடு போடுவதாக அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு பார்க்கின்றது. 

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றுவதுடன் பருவகால அறிக்கைகளையும் விடுத்து வருகிறது. 

மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளின் அறிக்கை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதை வெளிப்படுத்தி வருகின்றன. அத்துடன் தமிழரின் நீண்டகால அரசியல் பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் இவை தொட்டுச் செல்கின்றன. 

இதற்கு, மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்பது அவசியம் என்ற குரல் முக்கியமானதாக மாறியுள்ளது. மாகாண சபைகள் என்றதும் 13ம் திருத்தம் ஞாபகத்துக்கு வரும். 13ம் திருத்தம் என்றதும் 1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும்  ராஜிவ் காந்தியும் தங்கள் பரிவாரங்கள் சுற்றி நிற்க ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் புகைப்படம் கண்முன்னால் வந்து நிற்கும். 

கடந்த 38 வருடங்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளிப்படம் பல லட்சம் தடவைகள் அச்சு-மின்னியல்-சமூக ஊடகங்களை அலங்கரித்துள்ளது. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதோ இல்லையோ இந்த ஒளிப்படம் சாகாவரம் பெற்று நிற்கிறது என்று சொல்லலாம். இதுபோன்றதே ஜெனிவா தீர்மானங்களும். 

மகிந்தவும் கோதபாயவும் ஜனாதிபதிகளாக இருந்தபோது ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்ததோடு அவற்றை முழுமையாக நிராகரித்தும் வந்தனர். மைத்திரி-ரணில் நல்லாட்சிக் காலத்தில் இலங்கை அரசு ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி நல்ல பெயர் எடுத்து உலகத்தை ஏமாற்றியது. அது ராஜபக்சக்கள் ஆட்சிக்காலத்தைப் போன்று நல்லாட்சிக காலத்திலும் பொறுப்புக்கூறலுக்கும் சர்வதேச பங்களிப்புக்கும் இடமளிக்கப்படவில்லை. 

இப்போது ஆட்சியிலுள்ள ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தியும் முன்னோர்கள் பாதையிலேயே நடைபோடுகிறது. சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஒருபோதும் அனுமதி இல்லையென்று கூறிக்கொண்டு, கடந்த மாதம் ஜெனிவாவில் புதிய தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற அனுமதித்தது. இந்தத் தீர்மானம்ம மீதான உரையாடல் இடம்பெற்றவேளை வழக்கம்போன்று இந்தியா 13ம் திருத்த நடைமுறையையும் மாகாண சபை தேர்தலையும் கோரியது. இரு நாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட நாடென்ற வகையில் இந்தியா தனக்குள்ள உரிமையோடு ஒருபோதும் இலங்கையிடம் இதனை வலியுறுத்தவில்லை. 

கோதபாய பதவி துறந்தபின் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க 2023ல் இந்தியா சென்றிருந்தார். இப்போதைய ஜனாதிபதியான அநுர குமர திஸ்ஸநாயக்க தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக கடந்த வருடம் இந்தியா சென்றார். இருவரும் இந்திய பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் கூட்டறிக்கைகளை வெளியிட்டனர். இவைகளில் எப்போதுமே 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அல்லது நடைமுமைப்படுத்த வேண்டுமென்ற வரிகள் காணப்படவில்லை. 

இதனூடாக வெட்டவெளிச்சமாக தெரிந்து கொள்ளக்கூடியது, 13ம் திருத்தத்தை ஒப்பந்தத்தில் புகுத்திய இந்தியாவும் அதனை ஏற்றுக்கொண்ட இலங்கையும் அதனை நடைமுறைப்படுத்தும் நிலையில் இன்று இல்லை. வசதி கருதிய மறதி போன்று சட்டப்படியான ஒப்பந்த நடைமுறை கைகழுவப்படுவதாகவே இதனைப் பார்க்கலாம். 

கடந்த மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பங்குபற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜெனிவா தீர்மானம் தொடர்பான அறிக்கை ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இதன்போது எதிர்கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே கேள்வி எழுப்பியிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருக்கும் அக்கறையை அல்லது ஆதரவை இதனூடாக அறிந்துகொள்ள முடிகிறது. 

இது தொடர்பாக கருத்துரைத்துள்ள கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று, அதன் இந்த மாத 19ம் திகதிய பதிப்பில், 'இத்தனை வருடங்களாக மாகாண சபைகள் இல்லாமல் நாடு சரியாக இயங்கிக் கொண்டிருக்கையில் எதற்காக இந்தத் தேர்தல்கள்" என்று தலைவர்கள் கேட்கின்றனர் என சுட்டியுள்ளது. ஒன்பது மாகாண சபைகளும் இப்போது ஆளுனர்கள் நிர்வாகத்திலேயே உள்ளன. ஆளுனர்கள் எனப்படுபவர்கள் ஆட்சித்தரப்பின் நம்பிக்கையாளர்கள். இவர்களை அவர்களின் ஏஜன்டுகள் என்றும் கூறலாம். இயங்காத மாகாண சபைகளில் அக்கிராசனர்கள் (தவிசாளர்கள்) எந்தப் பணியுமின்றி கொழுத்த சம்பளத்தில் உள்ளனர் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். 

அண்மையில் தென்னிலங்கையில் இடம்பெற்ற மூன்று கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைந்தது. இதனால் மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் தனது தோல்வியை பகிரங்கப்படுத்த இவர்கள் விரும்பவில்லையென எதிர்க்கட்சிகள் கூற ஆரம்பித்துள்ளன. 

அண்மையில் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றியும், இனப்பிரச்சனைத் தீர்வு பற்றியும் ஆராயப்பட்டது. எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லையாயினும் மாகாண சபைத் தேர்தலை 2026ல் நடத்துவதாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையென்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிர்ணய ஆணையம் எல்லைகளை தீர்மானிக்க வேண்டும், எந்த முறையில் தேர்தல்களை நடத்துவதென நாடாளுமன்றம் முடிவெடுக்க வேண்டும் ஆகிய இரண்டும் நிறைவடையும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில்லையெனவும் இங்கு முடிவெடுக்கப்பட்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாகாண சபைத் தேர்தலை இப்போது நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லையென்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றமே இதனைத் தீர்மானிக்க வேண்டுமென்று கூறி, தேர்தலை நடத்த வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையை இவர் நினைவுபடுத்தியுள்ளார். 

மறுபுறத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் வடக்கில் சம~;டி அரசு உருவாகி விடுமென்று தென்னிலங்கையை அச்சுறுத்தும் பாணியில் கருத்து வெளியிட்டுள்ளார் சரத் வீரசேகர (இதற்குப் பெயர்தான் இனவாதம் என்பதை ஆட்சியிலுள்ளவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியாது). கோதபாய ஆட்சிக்காலத்தில் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவுமிருந்த சரத் வீரசேகர யுத்த காலத்தில் கடற்படை அதிகாரியாகவிருந்து இனஅழிப்பை மேற்கொண்டவர். 

13ம் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் மீது அக்கறையில்லாத இலங்கை-இந்திய அரசாங்கங்கள் அதன் புவிசார் நிகழ்ச்சிக்கு இணங்க வேண்டுமென்று விரும்பும் போதெல்லாம் அதனை ஒரு கைத்தடியாகப் பயன்படுத்துகிறதே தவிர இதில் எந்தளவிலும் அக்கறை காட்டவில்லை. 

மாகாண சபைத் தேர்தல்களை தோற்றுப்போயுள்ள அரசியல்வாதிகளும் எதிர்கட்சிகளிலுள்ள சிலருமே அக்கறை காட்டுவதாக அநுரவின் ஆட்சித் தரப்பினர் கூறி வருகின்றனர். மாகாண சபைகளை தேர்தல் ஊடாக கைப்பற்ற முடியாது போனாலும் அவற்றின் சாதாரண உறுப்பினர்களாகி எதிர்க்கட்சிகளில் இருந்தாலே போதுமென்ற சிந்தனையில் இவர்கள் தேர்தல்களை கேட்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலைமை தெற்கில் மட்டுமன்றி, தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் கூட அவ்வாறே காணப்படுகிறது. 

தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு கூட்டாக மாகாண சபைத் தேர்தல்களை சந்தித்து அநுர அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறி இப்போது பிரதேச வாரியாக கூட்டங்களை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இதன் பங்காளிகளான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரே~; பிரேமச்சந்திரன், கிளிநொச்சி சந்திரகுமார் ஆகியோரும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள்தான். வடமாகாண சபையின் முதலமைச்சராக தாமே வரப்போவதாக கனவு காணும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் தேர்தல்களில் தோல்வி கண்ட ஒருவர்தான். 

கடந்த கால தேர்தல்களில்; மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் இனத்தின் பெயரால் தங்களுக்கு ஒரு இடம் பிடிப்பதற்காகவே மாகாண சபைகளை நாடுகிறார்கள் என்பது தமிழ் மக்களிடையேயும் காணப்படும் அவதானிப்பு. இதே கருத்தை தென்னிலங்கையிலும் மையப்படுத்தி அநுர அரசு கூறி வருகிறது. அப்பாவி மகாஜனங்களை ஏமாற்றுவதற்கு மாகாண சபைத் தேர்தலை எதற்காக நடத்த வேண்டுமென்ற கேள்வி பெலவத்தை கூட்டத்திலும் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. 

இந்தப் பின்னணியில், இலங்கையின் நிகழ்கால அரசியல் புதிராக மாகாண சபை தேர்தல் காணப்படுகிறது.

No comments