மக்களின் நாடித்துடிப்பை அறிய மாகாண சபை தேர்தலை நடத்த தீர்மானம்


நீண்ட இழுபறியில் உள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத்தீர்வு கண்ட பின்னர் அடுத்த வருடம் நடுப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் அந்தப் பணியை விரைவுபடுத்தி தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மார்ச் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும் எனவும், தேர்தல் திகதி பற்றிய முடிவை தேர்தல் ஆணைக்குழுவே எடுக்கும் எனவும் அறியமுடிகின்றது. 

அரசாங்கம் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும், அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிகளுக்கு அதிக நற்பெயர் கிட்டவில்லை என்பது அரசாங்கத்தின் மதிப்பீடு. 

அதனால் அதை உறுதிப்படுத்துவதற்கான கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தலை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுகின்றது. 

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களின்படி, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கம் மிகவும் சிக்கலான, கடுமையான முடிவுகளை செயற்படுத்த வேண்டியுள்ளது.

 முக்கியமாக அரசாங்கம் பல அரசாங்க நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், சிலவற்றை மூடவும், அரசு செலவினங்களை வெகுவாகக் குறைக்கவும் கட்டாயப்படுத்தப்படும்.

இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்துவது தவிர்க்க முடியாமல் இருக்கும் என்பதுடன், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் தூண்டும் என்று அரசாங்கம் கருதுகின்றது.

 அதனால் மக்கள் ஆணையை நாடி பிடித்துப் பார்க்கும் வகையில் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

No comments