அரியாலையில் கழிவுகளை கொட்டாதே ! - அரியாலை மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்


அரியாலையில் தின்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்ஙளில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி வீதியை வழிமறித்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.

அதனை அடுத்து. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் போராட்ட இடத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுனர் செயலகத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபை, எமது ஊர்மக்களுடன் எந்தவகையிலும் கலந்து பேசாது சூழலை மாசுபடுத்தக் கூடிய குப்பைகளை எமது ஊரில் வீசும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது எமது ஊர் மக்களால் மட்டு மல்ல இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.

இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தனமாக எந்தவகையிலும் வகைப்படுத்தப்படாத - மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும்.

எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறையான எமக்கு மட்டுமானதல்ல, எதிர்கால தலைமறைக்கும் சொந்தமானவையாகும். 

எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உண்டு. 

இதனால் மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான குப்பை மேட்டுத் திட்டத்தைக் கண்டித்தும் அதனைக் கைவிட என தெரிவித்தனர்.




No comments