காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக ஆடைகள் , வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ள யாழ். வர்த்தகர்கள்


காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக ஆடைகள் , வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை பெற்று தர வேண்டும் என யாழ்ப்பாண வர்த்தகர்கள் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் போதே வர்த்தகர்கள் கோரிக்கை முன் வைத்தனர். 

யாழ்ப்பாணத்தில் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேவேளை 350 மெற்றிக் தொன் -500மெற்றிக் தொன் வரையான பொருட்களை காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கொண்டு வருவதற்கான அனுமதியையும் பெற்று தர வேண்டும் என கோரினர். 

அதற்கு அனுமதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

அதன் போது, கருத்து தெரிவித்த மாவட்ட செயலர் ம.பிரதீபன், 

தற்போது காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக பயணிகள் போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக 350மெற்றிக் தொன் தொடக்கம் 500மெற்றிக் தொன் வரையில்,  ஆடை வகை, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தால் , யாழ்ப்பாண வர்த்தகர்ளுக்கு நன்மை பயக்கும்.

நாவற்குழி களஞ்சியசாலையில் மூன்று பிரிவுகள் காணப்படுகிறது. அதில் ஒரு பிரிவு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றையது உணவுத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் களஞ்சியசாலையில் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என மாவட்ட செயலர் தெரிவித்தார். 

அதனை அடுத்து, களஞ்சிய சாலை திருத்த வேலைகள் மற்றும் களஞ்சிய சாலை தேவைப்பாடு குறித்த வர்த்தக சங்கத்தினால் முன் மொழிவுகளை முன் வைக்குமாறு வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.  

குறித்த கலந்துரையிடலில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக பிரத்தியேக உதவியாளர்  எஸ்.கபிலன் மற்றும் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments