சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்


பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரிய கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

அதன் போது குறித்த பெண்ணின் தலையில் பலமாக தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகிறது. 

அவரது நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் ,  ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

அறிக்கையின் பிரகாரம் பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அதேவேளை குறித்த பெண் தனது கணவருக்கு வவுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றதாகவும் , வீட்டை விட்டு அவர் செல்லும் போது சுமார் 10 பவுண் நகைகளை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் சடலமாக மீட்கப்பட்ட வேளை அவரது சடலத்தில் நகைகள் எவையும் காணப்படவில்லை. 

குறித்த கொலை சம்பவம் நகைக்காக மாத்திரம் நடைபெற்றதா ? அல்லது வேறு பின்னணிகள் உள்ளனவா என பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை குறித்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாதுள்ளதாகவும் ,  சடலம் நீண்ட நேரம் நீரில் மிதந்தமையால் அவற்றை உறுதியாக கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments