தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா!


ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்ததாகத் தகவல்கள் தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளன. 

2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ரக்பி வீரர் வசீம்தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் காரில் அவரை பின்தொடர்ந்த குழுவில் கஜ்ஜாவும் இருந்ததாக அண்மையில் இடம்பெற்ற குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் தெரியவந்தது. 

தாஜுதீன் கொலை செய்யப்பட்ட நாளில் கஜ்ஜா தங்கியிருந்த இடம் குறித்தும் தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கையை ஆய்வு செய்யும் வகையிலும் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கஜ்ஜாவும் அவரின் இரண்டு பிள்ளைகளும் கொலை செய்யப்படுவதற்காக, தாமே துப்பாக்கியை வழங்கியதாகப் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேசசபை வேட்பாளர் சம்பத் மனம் பேரி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

எனவே, கஜ்ஜாவின் கொலையானது, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இந்த நிலையில், அவரை 90 நாட்கள் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார்  நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். 

குறித்த விசாரணைகள் தொடர்பான B அறிக்கையைச் சமர்ப்பித்து அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். 

அத்துடன், மித்தெனிய பகுதியில் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகச் சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக, மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

No comments