ஜெனீவாவில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இடம்பெற்ற போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் 15.09.2025 அன்று தமிழ் இளையோர்

அமைப்பின் தலைமையில் நடைபெற்றது.

பேரணியானது ஜெனிவா தொடரூந்து நிலையத்துக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து, ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக்கு முன்னராக உள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் திடல் வரை சென்று பின் போராட்டம் ஆரம்பமானது.

இப் போராட்டமானது, சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடத்தி வரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதியை கோரியும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியும், ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் ஒன்றிணைவுடனும் உணர்வெழுச்சியுடனும் நடைபெற்றது.

ஐ.நா தலைமையக வளாகத்திலுள்ள முருகதாசன் திடலில் பெரும்திரளான இளைஞர்கள், உணர்வாளர்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து, தமிழீழத் தேசியக் கொடிகளையும் பதாகைகளையும் தாங்கி, முழக்கங்களை எழுப்பினர். அவர்களின் குரல்கள் ஐ.நா வளாகம் அதிரச் செய்ததோடு, அங்கு இருந்த வேற்றின மக்களின் அதிக கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்கள் ஏற்றினார். பின்னர் தியாக தீபம் திலீபன் மற்றும் ஈகைப் பேரொளிகளின் திருவுருவப்படங்களிற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அகவணக்கம் மற்றும் உறுதிமொழி இடம்பெற்றது. உறுதிமொழி இடம்பெறும் போது அனைத்துலக ரீதியில் கலந்து கொண்ட தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் உணர்வோடு பங்கெடுக்க, ஏனைய தமிழ் மக்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் படத்தையும் தமிழீழத் தேசியக்கொடியையும் கையில் ஏந்தியவாறு எழுச்சியுடன் உறுதிமொழி எடுத்தனர். மேலும், தமிழ் இளையோர் அமைப்பினால் வேற்றின மக்களுக்கான துண்டுப் பிரசுரங்கள் திடலில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புரையை அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு. கியூட்டன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலிய மொழிகளில் அந்தந்த நாடுகளிலிருந்து வந்த இளையோர் அமைப்பினர்கள் உரையாற்றினர்.

இறுதியாக பிரகடனம் வாசிக்கப்பட்டு, “நம்புங்கள் — தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற உரமேற்றும் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் தமிழீழ தேசியக் கொடி கையேற்கப்பட்டு, போராட்டம் பேரெழுச்சியுடன் நிறைவுபெற்றது.


No comments