வெளிப்படையான விசாரணைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை இடைஞ்சல் விளைவிக்குமா? பனங்காட்டான்


தமிழின அழிப்பு என்ற நீள்வரலாற்றில் ஓரங்கமே செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள். இங்கிருந்து மீட்கப்படும் மனித எச்சங்களே அரச பயங்கரவாதத்தின் அடையாளம். புதைகுழிகளுக்கு வெளிப்படையான விசாரணையை அறிவிப்பவர்கள் சர்வதேச நீதிப்பொறிமுறையை எதற்காக மறுக்க வேண்டும்.

உலகில் பலவிதமான விளையாட்டுகள் உண்டு. அவற்றுள் சில சர்வதேச பிரபல்யம் பெற்றவை. துடுப்பாட்டம் எனப்படும் கிரி;க்கெட் இதில் தனித்துவமானது. 

இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணிகள் பல உண்டு. ஒருநாள் போட்டியிலிருந்து ஐந்து நாட்கள் வரையான டெஸ்ட் போட்டி என இவைகளை வகைப்படுத்தலாம். மற்றெல்லா விளையாட்டுகளையும்விட துடுப்பாட்டத்திலுள்ள சிறப்பு, போட்டி நடைபெறும் மைதானத்தில் இதற்கு மட்டுமே ''ஸ்கோர் போர்ட்'' என்று அழைக்கப்படும் ஓட்ட (ரன்ஸ்) விபரம் உடனுக்குடன் பார்வைக்கு தெரியும் வகையில் அறிவிக்கப்படும். 

ஒரு பந்து வீச்சுக்கு ஒரு ஓட்டமா, இரண்டு ஓட்டங்களா, பௌண்டரி எனப்படும் நான்கு ஓட்டங்களா அல்லது சிக்ஸர் எனப்படும் ஆறு ஓட்டங்களா என்று ஸ்கோர் போர்ட் மாறிக்கொண்டேயிருக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் ஆட்ட முடிவில் அன்றைய ஸ்கோர் எவ்வளவு என்பது தெரிய வரும். 

செம்மணியிலுள்ள அரியாலை சித்துப்பாத்தி மயான மனித புதைகுழியிலிருந்து தினமும் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை கிரிக்கெட் ஸ்கோர் பாணியில் தினமும் ஊடகங்கள் ஊடாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மனதுக்கு இறுக்கமாகவும் துயரமாகவும் இருக்கும் இந்த எண்ணிக்கை இப்போது நாளாந்த செய்தியாகிவிட்டது. 

அரச பயங்கரவாதத்தின் கூலிப்படைகளாக செயற்பட்ட ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளின் எண்ணிக்கை ஒவ்வொருவரது மனதையும் பதைபதைக்க வைக்கிறது. இன்னும் எத்தனை மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படப் போகின்றனவோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் குடிகொண்டுள்ளது. 

இரண்டு கட்டங்களாக ஐம்பத்திமூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் ஒவ்வொரு நாளும் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை உடனடியாக அறிவிக்கப்படுகிறது. இந்த மாதம் ஐந்தாம் திகதிவரை இதன் எண்ணிக்கை 240 ஆகியுள்ளது. 

உயரமானவர்கள், சற்று குட்டையானவர்கள், குழந்தைகள் என்று இவை காணப்படுகின்றன. பாடசாலைச்  சிறாரின் பாவனைக்கான உபகரணங்கள், பால்போச்சிகள், புத்தகப் பைகள் என்பனவும் எலும்புகளோடு கிடக்கக் காணப்பட்டன. ஒரு குழந்தையின் எலும்புக்கூடு இன்னொரு எலும்புக்கூட்டின் மார்போடு அணைந்தவாறு மீட்கப்பட்டது. 

உயரமான ஒரு எலும்புக்கூட்டுக்கு அருகே சற்று உயரம் குறைந்த எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டது. இரண்டு எலும்புக்கூடுகளுக்கும் மேலே குறுக்காக இன்னுமொரு எலும்புக்கூடு இருந்தது. கடந்த வாரம் மீட்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் காணப்பட்டது. ஒருவர் நிஷ்டையில் இருப்பது போன்ற காட்சி இது. 

இனியும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பதை அங்கு பணியாற்றுபவர்கள் கூற முடியாதுள்ளனர். செம்மணியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரி~hந்தி வழக்கில் குற்றவாளியாக நிருபிக்கப்பட்ட ராணுவ கோப்ரல் ராஜபக்ச தெரிவித்த நானூறுக்கும் அதிகமான மனிதப்புதைகுழி சித்துப்பாத்திதான் என்பது இப்போது அடையாளங்கள் ரீதியாக பார்க்கப்படுகிறது. 

இந்தப் படுகொலைகளுக்கு உத்தரவிட்ட ராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்களும் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. எனினும், நீதிமன்றம் ஒன்றில் கோப்ரல் ராஜபக்ச அதனைத் தெரிவிக்கும்வரை அவர்கள் மீது அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது போகலாம். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இடமளிக்கப்பட்டால் இப்படுகொலை சம்பந்தமான சகல விபரங்களையும் தம்மால் வெளிப்படுத்த முடியுமென கோப்ரல் ராஜபக்ச தமது குடும்பத்தவர்கள் மூலம் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார். இதற்குச் சாதகமான பதில் எதுவும் இதுவரை இல்லை. 

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க மனிதப் புதைகுழி இடத்தை நேரில் சென்று பார்வையிடலாமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடைபெறவில்லை. எனினும் இது தொடர்பான தமது கருத்தை யாழ்ப்பாண நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அநுர குமர தெரிவித்தார். மனிதப் புதைகுழிகள் குறித்து வெளிப்படையாக விசாரணை நடைபெறுமென்று ஒரு வரியில் இவரது அறிவிப்பு வந்தது. 

சொன்னவர் ஜனாதிபதி என்றபடியால் இவரது ஒரு வரி ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. நீதவான் உத்தரவின்பேரில் அகழ்வுப்பணி இடம்பெறுவதாலும், அரச தரப்பு துறைசார் நிபுணர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் பொதுவான வெளிப்படைத் தன்மை அங்கு ஏற்கனவே காணப்படுகிறது. அகழ்வுப்பணி முழுமையாக முடிந்த பின்னர், சர்வதேசப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடைபெறுமெனவும், குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படுவர் எனவும் எந்த உறுதிப்பாட்டையும் அரச தரப்பில் இதுவரை எவரும் வழங்கவில்லை. 

மனிதப் புதைகுழிகளை அகழும் பணியில் அரசதரப்பு இதுவரை எந்த முட்டுக்கட்டையையும் போடவில்லை. இந்தப் புதைகுழிகளுக்குப் பொறுப்பு மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவுமே என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும். அதேசமயம் இனவாதம் கக்கும் கடற்படை முன்னாள் அதிகாரி சரத் வீரசேகர, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில போன்றவர்களின் கருத்துகள் வேறாக உள்ளன. நாடு முழுவதும் மனிதப் புதைகுழிகள் உள்ளன. செம்மணிக்கு மட்டும் எதற்காக ஆய்வு நடத்த வேண்டுமென்று இவர்கள் கேட்கின்றனர். இவர்கள் கருத்தின்படி பார்க்கின் இலங்கையை மனிதகுழித்தீவு என்று அழைக்க வேண்டுமென ஆலோசனை கூறுவதுபோல இருக்கிறது. 

இவ்வாறாக ஏறுக்கு மாறாக கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கியமான பதினாறு பரிந்துரைகளை அரச உயர்மட்டத்துக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளது. மனிதப் புதைகுழி விசாரணைகளில் எந்தச் சமயத்திலும் ராணுவத்தினரின் ஈடுபாட்டுக்கு அனுமதி அளிக்கக்கூடாதென ஆணைக்குழு கேட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சருக்கும் ராணுவத் தளபதிக்கும் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களையோ அல்லது எந்தவொரு உள்;ர் அதிகாரிகளையோ அல்லது சிவில் சமூக பிரதிநிதிகளையோ எவரும் தொடர்பு கொள்ளக்கூடாதென அறிவுறுத்துமாறும் ஆணைக்குழு கேட்டுள்ளது. மனிதப் புதைகுழிகளின் தற்போதைய நிலைமையை சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு தனித்தனியாக வெவ்வேறு துறைசார் தலைமைக்கும் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. நீதியமைச்சர், பொலிஸ் மாஅதிபர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் இதில் அடங்குவர். 

ஏற்கனவே புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் (உடலங்கள்) ஆடைகள் இல்லாமலும், ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதுமானது நீதிக்குப் புறம்பான கொலைகளைக் குறிப்பிடுவதாக இருப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனிதப் புதைகுழி தொடர்பான சாட்சிகள், ஊடகங்கள் என்பவற்றை அச்சுறுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் ராணுவத்திடம் ஆணைக்குழு கேட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான அவகாசம் இருப்பது அவசியமானது எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 

ஆரம்பத்திலிருந்து கடந்த வாரம்வரை அகழ்வுப் பணியை நேரடியாக பார்வையிட்டு வந்த யாழ்ப்பாண நீதவான் ஏ.ஆனந்தராஜா பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் சமூக மட்டத்திலிருந்து கிளப்பப்பட்டுள்ளது. இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட நீதவான் பதவி உயர்வு பெற்றுச் சென்றால் அவருக்குப் பதிலாக பொறுப்பேற்கும் நீதவானுக்கும் அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஆணைக்குழு சுட்டியுள்ளது. 

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசு சட்டத்துறை, சட்ட அமலாக்கத்துறை, சட்ட மாஅதிபர் இலாகா போன்றவற்றை நேர்கோட்டில் இணைத்து அதனூடாக நீதி வழங்குவதை அரசியலாக்கி வருவதாக குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சியினர் இதன் அடிப்படையில் கூட்டணி ஒன்றை உருவாக்க முயன்று வருகின்றனர். இவர்கள் எவரும் இதுவரை மனிதப் புதைகுழி தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காது சிங்களப் படைத்தலைமைகளையும் ராணுவத்தையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண தடயவியல், தொல்பொருளியல் துறைசார் நிபுணர்கள் சர்வதேச நிபுணத்துவ ஆலோசனையை பெற அனுமதிக்கப்படாதவரை எதிர்பார்க்கப்படும் நீதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 

புதைகுழிகள் குறித்து வெளிப்படையான விசாரணை இடம்பெறுமென்று ஓராயிரம் தடவைகள் அரசாங்கம் சொன்னாலும் அதனை நம்புவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தயாராகவில்லை. தமிழின அழிப்பு என்ற நீள்வரலாற்றில் ஓரங்கமே செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள். இங்கிருந்து மீட்கப்படும் மனித எச்சங்களே அரச பயங்கரவாதத்தின் அடையாளம். புதைகுழிகளுக்கு வெளிப்படையான விசாரணையை அறிவிப்பவர்கள் சர்வதேச நீதிப்பொறிமுறையை எதற்காக மறுக்க வேண்டும்? 


No comments