யாழில். கடந்த 08 மாதங்களில் 937 பேருக்கு டெங்கு
யாழ் மாவட்டத்தில் டெங்குநோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937டெங்குநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவுசெய்யப்படவில்லை என யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் பருவமழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ம்திகதி மாவட்டடெங்குகட்டுப்பாட்டுக்குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இதன் அடுத்த கட்டமாக பிரதேசசெயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டுகுழுக் கூட்டங்களும் ,கிராமசேவையாளர் தலைமையில் கிராமமட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம் பெறும்.
பொதுமக்கள் மத்தியில் டெங்குகட்டுப்பாட்டு பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்குவிழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும், 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் ,16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதிமுதல் 24ம் திகதிவரையிலான மூன்றுதினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன.
இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும் ,வேலைத்தலங்களிலும் ,கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் ,பொது இடங்களிலும் டெங்குநுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைஅழிக்கும் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
இக்காலப் பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும் , கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர். இக்குழுக்களில் சுகாதார திணைக்கள ,பிரதேசசெயலக, உள்ராட்சிமன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர்
எனவே யாழ் மாவட்டத்தில் டெங்குநோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன் என தெரிவித்தார்
Post a Comment