மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை


யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்போது,  நிலையத்தின் செயற்பாடுகளை  எதிர்வரும் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பது குறித்து பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலர் , 

பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்தும் அதன் இட அமைவு தொடர்பாகவும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டதுடன், பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தொடர்ந்து இயக்குவதற்கான தேவைபாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்,

மேலும், இந் நிலையத்தின் செயற்பாடுகளை இந்த மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூகத்துக்கு பயனுள்ள வகையில் இந்நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர் , சாவகச்சேரி பிரதேச செயலாளர், கணக்காளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர். 

No comments