யாழில். தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

குறித்த போராட்டம் யாழ் செம்மணி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 29ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள்  மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments