மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் - உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை




மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடாத்தி, ஜனநாயகத்தின் இருப்பை உறுதி செய்யுமாறு, உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. 

உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றியத் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான,  கனகரஞ்சிதன் பிரணவன், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆறுமுகம் கண்ணா, சஞ்சீவ ரொஷான்,  A.A.D.சுகத் குமார, அஸ்லாம் அலாவுதீன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேயன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையிலையே அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறித்த அறிக்கையில், 

இலங்கை அரசியலமைப்பில் நிர்வாக அதிகார பகிர்வுகளாக  மேல்நிலையிலுள்ள நாடாளுமன்றம், கீழ் மட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்கள் என்பவற்றிற்கு ஜனநாயக ரீதியாக தேர்தல்கள் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அதனூடாக தற்போது நிர்வாக சேவைகள் நடைபெற்று வருகின்ற போதும் இடை நிலை கட்டமைப்பாக உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் மிகநீண்ட காலமாக நடாத்தப்படாது உள்ளமையால் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள ஆளுநரின் கீழே நிர்வாக செயற்பாடுகள் நடைபெறுகிறது, 

இது ஜனநாயக இடைவெளியை உருவாக்கியுள்ளது அனைத்து செயற்பாடுகளிற்கும் மத்திய அரசையும், ஆளுநரையுமே சார்ந்து நிற்க வேண்டியதாக உள்ளமையால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளிலும் ,இயங்கு நிலைகளிலும் இது  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனூடாக அதிகார பங்கீடு செயற்பாடுகள் சரியானதாக அமையாத காரணத்தால் இந்த அரசு அரசியலமைப்பு ரீதியாக உள்ள மாகாண சபைகளிற்க்கான தேர்தலை விரைந்து நடத்துவதனூடாக தெரிவு செய்யப்பட்ட  மக்கள் பிரதிநிதிகள் சபை இயங்கிட வழி ஏற்படுத்துவதே மாகாண சபைகளிற்க்கான அதிகார பங்கீட்டு செயற்பாடுகள் சரிவர நிர்வாக ரீதியாக நடந்திட உதவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments