மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் அடாவடியில் ஈடுபட்ட பொலிஸார்
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது, பொலிஸார் முதியவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி மிக மோசமான முறையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தனர்.
அதேவேளை குறித்த சம்பவத்தை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் ஏசி துரத்தியடித்துள்ளனர்.
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் போது, கடந்த 35 வருட காலங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் , ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக , மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் வயோதிபர்கள் பெண்கள் என்ற வேறுபாடுகள் இன்றி , அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி , அவர்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இன்றி , பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தள்ளி , தகாத வார்த்தைகளால் பேசி அப்புறப்படுத்தி இருந்தனர்.
இந்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்
மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி , தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு , அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்க வந்த வேளை , எமது காணிகளை விடுவியுங்கள் என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடாத்த முற்பட்ட போது கடந்த கால அரசாங்கம் போன்றே , பொலிஸார் எம் மீது காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டுள்ளார்.
மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதே பொலிஸார் எம்முடன் நடந்து கொண்ட விடயம் சான்று பகிர்கின்றது என காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
Post a Comment