தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் - நல்லூரில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்!!
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.
இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும் வரை நீராகாரமற்ற உண்ணாவிரதம் இருந்து பன்னிரண்டாவது நாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன். தமிழீழ மக்களிற்கும் உலகிற்கும் இந்திய ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டிய மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களின் பின்னரான 26ஆம் திகதி அவரது உயிர் பிரிந்தது.
திலீபனால் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள்
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தமிழர்கள் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறையிலும், இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
- தமிழர் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தப்பட வேண்டும். என்பதே அவரின் கோரிக்கையாகவும் அபிலாசையாகவும் இருந்தது.
Post a Comment