எல்ல விபத்து - உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு ; தங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.


எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற  பேருந்து விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன, 12 சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாரணையில், தங்காலை பகுதியில் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.   

எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பேருந்து பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி  500 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும், இலங்கை விமானப்படை தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு ஆஐ-17 ஹெலிகாப்டரையும், வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் ஒரு பெல் 412 ஹெலிகாப்டரையும் நிறுத்தியுள்ளது.

இந்த ஹெலிகாப்டர்கள் நோயாளிகளை கொழும்புக்கு  கொண்டு செல்ல அல்லது தேவைக்கேற்ப கூடுதல் மீட்பு உதவியை வழங்க தயாராக உள்ளன.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலையிலும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

No comments