நாமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அனுமதி


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியதன் மூலம், இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை அனுமதியளித்தது. 

இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளதுடன், அதில் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்த மனு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதிபத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெரகொட, நாமல் ராஜபக்ஷவின் திருமணத்திற்கான மின்சாரக் கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியது தொடர்பாக மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதால், இந்த வழக்கில் நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே விடயம், சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான அறிவிப்பு மட்டுமே என்று சட்டத்தரணி கூறினார். 

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த அமர்வு, மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது. 

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு இலங்கை மின்சார சபைக்கு 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

பின்னர் இந்த வழக்கைத் தாக்கல் செய்த பின்னரே குறித்த மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொதுமக்களின் சிறிய மின்சாரக் கட்டணம் கூட சரியான நேரத்தில் செலுத்தப்படவில்லை என்று கூறி, இலங்கை மின்சார சபை மின்சாரத்தைத் துண்டித்து வருவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், இவ்வளவு பெரிய மின்சாரக் கட்டணத்தை சரியான நேரத்தில் வசூலிக்க நடவடிக்கை எடுக்காதது கடுமையான தவறு என்று கூறியுள்ளார். 

இலங்கை மின்சார சபையின் இந்த அசாதாரண நடவடிக்கை மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

No comments