புதைகுழிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஆவிகள் துரத்திக்கொண்டேயிருக்கும்! பனங்காட்டான்


புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுபவை உணர்வற்ற வெறும் எலும்புத் தொகுதிகள் அல்ல. இத்தனை வருடங்களாக நீதி கேட்பதற்கான அடையாளமாகவே அவை புதைந்திருந்தன. இதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த புனித ஆவிகள் துரத்திக் கொண்டேயிருக்கும். 

ஊழல், மோசடி, ஏமாற்று, இலஞ்சம் ஆகியவை தங்கள் ஆட்சியில் முற்றாக ஒழிக்கப்படும் என்று அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலங்களில் தெரிவித்தது. 

முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புச் சலுகைகள் மற்றும் அளவுக்கதிகமான பாதுகாப்பு ஆகியவை குறைக்கப்படும் என்றும், எம்.பிக்களுக்கான ஓய்வூதியம் ரத்துச் செய்யப்படும் என்றும் இவர்களால் தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. 

இவையெல்லாம் சும்மா சொல்லப்படுகின்றன என்று மக்கள் அப்போது நினைத்தனர். முன்னைய அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் சொன்னவை எதனையும் செயற்படுத்தாது விட்டதால் தேசிய மக்கள் சக்தியினரின் வாக்குறுதிகளும் அவ்வாறானது என நினைத்ததே இதற்குக் காரணம். 

ஆனால், தற்போது ஆட்சித்தரப்பினர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது. முன்னைய அரசியல் பிரமுகர்கள் பலர் உள்ளே தள்ளப்படுகின்றனர். சிலர் கடும் நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல முடியாது தடை செய்யப்பட்டு பிணையில் விடப்படுகின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் இரண்டு புதல்வர்களின் முன்னைய செயற்பாடுகள் (கொலை, காணி மோசடி) நீதிமன்றத்தின் முன்னாலுள்ளது. தேர்தல்கால உறுதிமொழிகளை ஏன் நிறைவேற்றவில்லையென்று சில மாதங்களுக்கு முன்னர் கேட்ட ஷமுன்னாள்கள்|, இப்போது சட்டம் தனது வேலையை ஆரம்பிப்பதில் அச்சம் கொண்டு அரசியல் பழிவாங்கல் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

சுறாக்களைத் தவிர்த்து இறால்களைப் பிடிக்கிறார்கள் என்றும் அரசின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஆட்சித்தரப்புக்குள் பிளவு, பிரிவு ஏற்படவில்லையென்றால் சுறாக்களும் பிடிபடலாமென பலரும் நம்புகிறார்கள். இங்கு சொல்லப்பட்டவை எல்லாம் பெரும்பான்மை சமூகத்தினரை மையப்படுத்தியவை. 

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எதிர்பார்க்கப்பட்டமாற்றம் எதுவும் இதுவரை காணப்படவில்லை. காணிகளை அளவிடுதல், அவைகளை அபகரிக்க அதிகாரிகளைப் பயன்படுத்துதல், பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகள் விடுதலையை பேசிக் கொண்டிருப்பது, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் கால இழுத்தடிப்பு என்று இதற்கொரு பட்டியலே உண்டு. 

ஆகப்பிந்தியதாக, செம்மணியை ஒட்டிய அரியாலை சித்துப்பாத்தி மயான மனிதப் புதைகுழிகள் விடயத்தை பார்க்கலாம். நாளாந்தம் மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. ஏராளமானவை புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள். இவர்களுள் சிறுவர்களும் அடக்கம். கிடைக்கப்பெற்ற ஐம்பத்திநான்கு சான்றுப் பொருட்களுள் பாடாசலைப் பை, பாற்போச்சி, விளையாட்டுப் பொருட்கள் என்பவை அடையாளம் காணப்பட்டன. ஒரு குழந்தையை அணைத்தபடியான எலும்புத் தொகுதியொன்று மீட்கப்பட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் மண்ணுக்குள் குட்டி போட்டவை அல்ல. குஞ்சு பொரித்தவையும் அல்ல. இப்பகுதிகளில் முகாமிட்டிருந்த அரச பயங்கரவாத படையினரின் கொடூர கொலைகளுக்கு ஆளானவர்களின் அடையாளங்கள் இவை. இவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்டபின் புதைக்கப்பட்டார்களா என்பது இனித்தான் தெரியவரும்.

மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகளையும் சான்றுப் பொருட்களையும் அடையாளம் காட்ட வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் உறவினர்களும் நண்பர்களும் எத்தனை பேர் அங்கு உள்ளனர். அடையாளம் காட்டக்கூடிய எவ்வளவு தொகையினர் புலம்பெயர்ந்து வாழுகின்றனர். 

சர்வதேச ரீதியான பார்வையாளர்களும், மனித உரிமைகள் அமைப்புகளின் அலுவலர்களும் இவ்விடயத்தில் நேரடியாகப் பங்களிப்பது அவசியமானது. சர்வதேச உதவியுடன் இலங்கை அரசே உண்மையை கண்டறிய முடியுமென்று கூறப்படுமானால், அது கள்வனே கள்வனைக் கண்டுபிடிப்பான் என்பது போலாகும். 

இவ்விடயத்திலாவது ஒன்றுபட்டு ஒரே குரலில் நிற்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் இன்னமும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெனிவா விவகாரத்தில் தமிழரசும் தமிழ் காங்கிரசும் தேர்தல்கால மனநினைவில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழரசு கட்சிக்கு இப்போது மூன்று தலைவர்கள். முன்னர் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சி.வி.கே.சிவஞானம் இப்போது பதில் தலைவராகியுள்ளார். அடுத்தவர் கட்சித் தலைவராகத் தெரிவாகியும் அந்தக் கதிரையில் ஏற முடியாது தடுக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சியின் குறுநில மன்னரான சிறீதரன். மூன்றாமவர்,  எம்.பி.யாகவும் முடியாமல் கட்சித் தலைவராகவும் முடியாதுபோன சு(ம்)மா சுமந்திரன். 

சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் கூட்டமொன்றின் மேடையிலிருந்து இறக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் மண்டபத்திலிருந்து வெளியேறிய இவர், இப்போது குசினிக் கூட்டங்களை (லண்டன்) நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இரண்டு கில்லாடிகளுக்கு நடுவே பதில் தலைவர் திண்டாடுகிறார் என்று உள்வீட்டுப் பிரமுகர் ஒருவர் சொன்னது சரி போலத்தான் தெரிகிறது. 

தமிழரசுக் கட்சி மீதான வழக்கு விரைவில் முடிவடையுமென்று சிலர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அப்படித்தான் நல்ல தீர்ப்பு ந்தாலும் வேறுசில புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? கட்சிக்குள் இருந்தவாறே அதனை பலவீனப்படுத்தி இயங்க முடியாது தடுக்க ஒரு குழு தீவிரமாக இயங்கி வருவதாக உள்வீட்டுத் தகவல்கள் சொல்கின்றன. 

முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டதுபோல இலங்கையின் மூத்த அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்ட நிலைமையே இன்று தமிழரசுக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. எண்ணுக் கணக்கில் கூடிய தமிழ் எம்.பி.க்கள் தமிழரசுக் கட்சியிடம் உண்டு. உள்;ர் ஆட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கில் கூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ் கட்சியும் தமிழரசுதான். ஆனாலும் பல சபைகளை கைப்பற்ற முடியாது அது கோட்டை விட்டுள்ளது. முக்கியமாக நல்லூர், கோப்பாய் என்பவற்றைக் குறிப்பிடலாம். 

தெற்கில் ஐக்கிய தேசிய கட்சி காணாமற் போய்விட்டது. அதனைப் பிளவுபடுத்தி இன்னொரு கட்சியை உருவாக்கிய சஜித் பிரேமதாச ஆட்சியைப் பிடிக்க முடியாத ஒரு தலைவராக தம்மை இனங்காட்டியுள்ளார். பண்டாரநாயக்கவால் உருவாக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்திய சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து இயங்க முடியாது போய்விட்டது. அதனைப் பிளவுபடுத்தி பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை உருவாக்கி ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவால் அதனை காப்பாற்ற முடியவில்லை. 

தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் தமிழரசுக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் நிலைக்கு இறங்கியுள்ளது. எழுபத்தைந்தாவது வயதிலிருக்கும் இக்கட்சிக்கு எழுச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு மாநாட்டை நடத்;தும் வல்லமை கூட இல்லாமல் போய்விட்டது. 

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற வாக்குக்கு அமைய தெற்கில் ஜே.வி.பி. புதிய பெயரான தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதுபோன்று தமிழர் தாயகத்தில் புதிய சக்தியொன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு எப்போது ஏற்படும்?

மாகாண சபைகள் என்றும், உள்;ர் நிர்வாகம் என்றும், சம~;டி என்றும் எவ்வளவு காலத்துக்கு பேசிக்கொண்டிருக்க முடியும்? பதின்மூன்றாம் திருத்தத்தை அறிமுகம் செய்த இந்தியாவே அதனை மறந்துவிட்டது. இல்லாதவைகளை பேசிக் கொண்டிருப்பதைவிட்டு, இருப்பவைகளை முழுமையாக பயன்படுத்தப் பாருங்கள் என்று கடந்த வருடம் தம்மைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியதில் ஆழமான அர்த்தம் உண்டு. 

தெற்கில் அரசியல் நகரும் பாதையைப் பார்த்தால் இந்தக் குட்டித்தீவில் இனிமேல் தேர்தல்கள் நடைபெறுமா என்பது சந்தேகமாகத் தெரிகிறது. அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னதுபோல் இருப்பவைகளைப் பாதுகாப்பதே இன்றுள்ள பிரதான இலக்காக இருக்க வேண்டும். தமிழர் இப்போது  அனுபவிக்கும் அற்ப சொற்ப உரிமைகள் எதுவும் தாமாக அவர்களுக்குக் கிடைத்தவையல்ல. உரத்துக் கேட்டும் பல்வேறு வகைகளால் போராடியும் பெறப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மனிதப் புதைகுழிகளுக்கு வழமைபோல இனவாத நாக்குகள் வேறு வியாக்கியானங்களைக் கொடுக்கின்றன. இதனை எதிர்த்து போராடியே நீதியை பெறவேண்டி ஏற்படலாம். இதற்குத் தேவையானது தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை. காணாமலாக்கப்பட்டோர் விடயம் போல மனிதப் புதைகுழி விவகாரமும் காலமாகிப் போகலாமென்ற அச்ச உணர்வு மக்கள் மனதில் இருக்கிறது. 

புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்டவையும், மீட்கப்பட இருப்பவையும் வெறும் எலும்புக்கூடுகள் அல்ல. அவை எந்தப் பாவமும் புரியாத ஏதுமறியாத அப்பாவிகளின் எச்சங்கள். தமிழராகப் பிறந்த குற்றத்தால் அரச பயங்கரவாதத்துக்கு பலியானவர்கள். தாங்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு அலையும் இந்த ஆவிகள், நீதி கிடைக்காதவரை சாந்தி பெறமாட்டா. தங்கள் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்துபவர்களை இவர்கள் துரத்திக் கொண்டேயிருப்பார்கள்.  

No comments