போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி


போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலைகளிலுள்ள உளவள ஆசிரியர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி அவர்கள் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. 

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நிலையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே கலந்துடையாடலில் கலந்து கொண்டவர்களால் குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 

கலந்துரையாடலுக்கு வருகை தந்த தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.கொத்தலாவல தலைமையிலான குழுவினரை வரவேற்ற ஆளுநர், வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் உடனடியாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கும் நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விவரித்தார். 

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நடவடிக்கைகள் தொடர்பிலும், இந்த ஆண்டுக்குள் வடக்கில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பிலும் பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்தார். 

பாடசாலைகளிலுள்ள உளவள ஆசிரியர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி அவர்கள் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அத்துடன் சமூக மட்டத்திலும் அத்தகைய விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். 

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அலுவலர்கள் இல்லை என்ற விடயமும் முன்வைக்கப்பட்டது. 

தற்போது அபிவிருத்தி அலுவலர்களாகப் பணியாற்றுபவர்களில் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதன் ஊடாக இதனை நிவர்த்தி செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டது. 

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான பொருத்தமான இடங்கள் தொடர்பில் இதன் பின்னர் ஆராயப்பட்டது. 

நிரந்தரமான இடமே அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். 

இதற்கு அமைவாக கிளிநொச்சி கிருஸ்ணபுரம் மற்றும் முல்லைத்தீவு நகரிலுள்ள பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றைப் பார்வையிட்டு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். 

மேலும், ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகள் ரீதியாகவும் உதவிநாடும் நிலையம் (Dropping center) அமைப்பதற்கு போதிய இடவசதியுள்ள பிரதேச மருத்துவமனைகளைப் பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. 

முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சேவை மையங்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. விரைவாக அதனைச் செய்து முடிக்கவேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நேரடியாகவும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி 'சூம்' செயலி ஊடாக இணைந்துகொண்டார். 


No comments