நல்லூர் அசைவ உணவகம்: கண்கொள்ளாத மாநகரசபை: ஆளுநரிடம் முறைப்பாடு!
நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும்நல்லை சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை சைவ அர்ச்சகர் சபை, சைவ பரிபாலன சபை, அகில இலங்கை சைவ மகா சபை, சைவ வித்யா விருத்தி சங்கம், இலங்கை சைவசமய பேரவை உட்பட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்துகற்கைகள் பேராசிரியர், திருக்கேதீச்சரம் அறங்காவலர் ஆகியோர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
முதல் கட்டமாக யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட நல்லூர் ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை சிவபுண்ணிய பிரதேசமாக மாநகர சபை வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். இதையே ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்றி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலய நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
மேலும் மேற்படி உணவகம் பன்னாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கையின் சட்டம் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள் எனவும், அவர்கள் நல்லூரில் தமது நிறுவனத்தின் கிளையை எந்தவொரு அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது திறந்தமை திட்டமிட்ட நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்ச் சைவப்பேரவையினர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், அனுமதியற்ற வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இளைய சமூகத்தை வழிப்படுத்தும் வகையில் அறநெறிக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான யோசனை தொடர்பிலும் தமிழ்ச் சைவப்பேரவையினர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து தனியார் கல்வி செயற்பாடுகளையும் வெள்ளி மாலையும், ஞாயிறு மதியம் வரையிலும் மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்து நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். அத்துடன் அறநெறி வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் அறநெறி வகுப்புக்கான வருகை மற்றும் செயற்பாடுகளை கட்டாயக் கல்வியின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
சில பாடசாலைகளில் மாணவர்களை சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடைவிதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவப்பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டனர்.
தமிழ்ச் சைவப் பேரவையினரின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
Post a Comment